சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக நாணய நிதியம் கடும் நிபந்தனை

worldbankஅனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து சிறிலங்கா அரசினால் கோரப்பட்டுள்ள 1.9 பில்லியன் டொலர் கடன் தொகை தொடர்பாக அனைத்துலக நாணய நிதியம் கடுமையாக நிபந்தனைகளை விதித்துள்ளதனால் நிதி உதவிகள் கிடைப்பதற்கு மேலும் தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து சிறிலங்கா அரசினால் கோரப்பட்டுள்ள 1.9 பில்லியன் டொலர் கடன் தொகை தொடர்பாக அனைத்துலக நாணய நிதியம் கடுமையாக நிபந்தனைகளை விதித்திருக்கின்றது.

சிறந்த நிதி முகாமைத்துவ கட்டமைப்புக்கள் மற்றும் அரச நிர்வாக கட்டமைப்புக்களை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை அனைத்துலக நாணய நிதியம் விதித்துள்ளது.

இதனால் சிறிலங்காவுக்கான நிதி உதவிகள் கிடைப்பதற்கு எதிர்வரும் ஜூன் மாதம் வரை தாமதமாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்துலக நாணய நிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கமாட்டாது என சிறிலங்கா தரப்பில் இருந்து பலர் கருத்துக்களை கூறிவந்திருந்தனர். ஆனால், சிறிலங்கா அனைத்து சட்டவிதிகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்துலக நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

17 ஆவது திருத்தச்சட்டமும் அதில் அடங்கியுள்ளதுடன், பொதுச்சேவைகள், காவல்துறை, தேர்தல் ஆணையகம், ஊழல், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை என்பவற்றிற்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

பொதுச்சேவைகள் பணியாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படுவதுடன், புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனைகளையும் அது விதித்துள்ளது.

அனைத்துலக நாணய நிதியத்தின் ஆசியப் பிராந்திய பிரதி பணிப்பாளர் கல்ப்பனா கோசர் தலைமையிலான ஆறு பேர் அடங்கிய குழு ஒன்று சிறிலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் கடந்த வாரம் புறப்பட்டுச் சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.