கிளிநொச்சிக்கு இரகசியமாக சென்று வந்த மகிந்த

rajapakse-in-kilinochiகிளிநொச்சி பகுதிக்கு கடந்த வாரம் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட பயணம் மிகவும் இரகசியமாக வைக்கக்பட்டதுடன் அதிகளவிலான பாதுகாப்புக்களும் வழங்கப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கிளிநொச்சிக்கு கடந்த வியாழக்கிழமை (16.04.09) மேற்கொண்ட திடீர் பயணமானது மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவே ஒழுங்கு செய்திருந்தார். அதனை அவர் மிகவும் உயர்ந்த இரகசியமாக பேணியிருந்தார்.

கிளிநொச்சியின் பாதுகாப்புக்கள் மிகவும் பலப்படுத்தப்பட்டன. அதற்கான கட்டளைகள் இராணுவப் படையணிகளின் கட்டளை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

படைத் தளபதிகளுக்கு மகிந்தவின் பயணம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. வன்னிக் களமுனையில் உள்ள படையணிகளில் இரண்டு படையணிகளின் கட்டளை அதிகாரிகளுக்கே பயணம் தொடர்பான அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

57 ஆவது படையணியிடம் கிளிநொச்சி நகருக்கான பாதுகாப்புக்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

மகிந்தவின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் பிரிகேடியர் ஜெகத் அல்விஸ் கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சிக்குச் சென்று பாதுகாப்பு நிலமைகளை ஆராய்ந்திருந்தார்.

கிளிநொச்சி நகரம் அதியுயர் பாதுகாப்பு பிரதேசமாக கடந்த வியாழக்கிழமை காலை மாற்றம் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இராணுவத் தலைமையகத்திற்கு வந்த மகிந்த தலைமையிலான குழுவினர் உலங்குவானூர்திகள் மூலம் வவுனியாவை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து கிளிநொச்சிக்கு சென்றிருந்தனர்.

வன்னிப் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்யவும் அவர்களுடன் இணைந்து கொண்டிருந்தார். 9:05 நிமிடமளவில் முப்படைத் தளபதிகள், காவல்துறை பணிப்பாளர், ஊர்காவல் படை பணிப்பாளர், சிறப்பு அதிரடிப்படை தளபதி ஆகியோர் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் உலங்குவானூர்தி மூலம் வந்திறங்கினர்.

இதன் பின்னர் 9:10 நிமிடமளவில் மற்றுமொரு உலங்குவானூர்தியில் அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச ஆகியோர் வந்திறங்கியிருந்தனர்.

காலை 9:30 நிமிடமளவில் பெல்-412 ரக சிறப்பு உலங்குவானூர்தியில் மகிந்த ராஜபக்ச கிளிநொச்சி மருத்துவமனை வளாகத்தில் வந்திறங்கியிருந்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர்கள் பின்னர் துருப்புக்காவி கவச வாகனத்தில் ஏறி கிளிநொச்சி நகரத்தை பார்வையிட்டிருந்தனர்.

முற்பகல் 11:05 நிமிடமளவில் அவர்கள் மீண்டும் கொழும்பு திரும்பியிருந்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.