ஈழத் தமிழருக்காக தீக்குளித்த சிவானந்தம் மரணம்

sivananthamஈழத் தமிழர் உரிமைக்காக தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த கரூர் சிவானந்தம் உடலத்துக்கு அரசியல் கட்சி, தமிழ் அமைப்புக்கள் ஆகியவற்றின் தலைவர்கள் வணக்கம் செலுத்தியுள்ளனா்.

கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 46). இவர் தமிழ் தன்னுரிமை இயக்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.

ஈழத் தமிழர்கள் உரிமைக்காக பல்வேறு அமைப்புக்களின் மூலம் இவர் குரல் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வடபழனியில் உள்ள மாநிலத் தேர்தல் அலுவலகம் முன்பு சென்ற சிவானந்தம், ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற அங்கு போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டவாறே தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

பின்னர் உடல் கருகிய நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு மருத்துவ சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.

இதனையடுத்து சிவானந்தத்தின் உடலம் உடற்கூற்று ஆய்வுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி, பழ.நெடுமாறன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சி.மகேந்திரன் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து சிவானந்தத்தின் உடலத்துக்கு வணக்கம் செலுத்தினர்.

பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய பழ.நெடுமாறன்,

ஈழத் தமிழர்களுக்காக அன்று முதல் இன்று வரை சிவானந்தம் உணர்வுபூர்வமாக பாடுபட்டு வந்தவர். ஈழத் தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது குறித்து மனவேதனை அடைந்த இவர், தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார்.

சிவானந்தத்தின் உயிர்த் தியாகத்தில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை என்றார்.

ஈழத் தமிழர் சிக்கலுக்காக முத்துக்குமார் தொடங்கி சிவானந்தம் வரை 16 பேர் உயிர்த் தியாகம் செய்திருக்கின்றனர்.

இதற்குப் பிறகும் இந்திய அரசு, ஈழச் சிக்கல் குறித்துக் கண்டுகொள்ளாமலும், உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் 6 கோடி தமிழர்களுக்கும் அளவற்ற வேதனையை அளிக்கிறது.

இலங்கை பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் இந்திய அரசு ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அவமதித்திருப்பதாகத் தெரிகிறது. இதன் விளைவை இந்திய அரசும் அதற்குத் தலைமை ஏற்றிருக்கும் காங்கிரசும் நிச்சயம் சந்திக்கும் என்றும் பழ.நெடுமாறன் கூறினார்.

உடற்கூற்று ஆய்விற்குப் பின்பு சிவானந்தத்தின் உடல் நேற்று மாலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிவானந்தத்தின் உடலத்தை உறவினர்கள் அவரின் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரின் உடலம் நாளை அடக்கம் செய்யப்படுகின்றது.

இறுதி நிகழ்வில் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.