கணவன் கடத்தப்பட்டு 3 நாட்களில் மனைவியும் கடத்தப்பட்டார் பிள்ளைகள் அனாதரவான நிலையில்

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக விசேட அதிரடிப்படை புலனாய்வாளர்களால் பொதுமக்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகின்றது. கடந்த வாரம் 13 ஆம் திகதி மாடு விற்பனைக்காக அக்கரைப்பற்றிலிருந்து சென்ற இருவர் இரவு 7 மணியளவில் கோளாவில் பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளனர்.

மறுநாள் 8 ஆம் கட்டையடியில் இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன. கடத்தப்பட்டவர்களில் ஒருவர் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பாலசுப்பிரமணியன் குகதாசன் என்றும் மற்றையவர் 51 வயதுடைய மூன்றுபிள்ளைகளின் தந்தையான கீர்த்தி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கீர்த்தி என்பவரின் மனைவியான 45 வயதுடைய மகேஸ்வரி 17 ஆம்திகதி வெள்ளிக்கிழமை வீட்டில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள இவரது வீட்டுக்கு சிறிது தூரத்தில் வானை நிறுத்திவிட்டு சிவிலுடையில் வந்த சிலர் தாங்கள் சிஐடி எனக்கூறி இவரை அழைத்துச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று பெற்றோர்கள் கடத்தப்பட்டுள்ள நிலையில் சித்த சுவாதீனமற்ற இவர்களது இரண்டாவது மகனும், தனியார் பயிற்சி நிலையமொன்றில் தொழில்புரிந்து வருகின்ற மகளும் அநாதரவான நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக எமது மட்டு நிருபர் அறியத்தருகிறார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.