இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு தூள் தூளாகும்: வைகோ எச்சரிக்கை

2006010211650101இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு தூள் தூளாகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழும் பகுதிகள் இரத்தக் காடாக மாறிவிட்டது. இந்திய அரசு வழங்கிய சக்திவாய்ந்த நவீன ஆயுதங்களின் துணைகொண்டு சிறிலங்கா இராணுவம் தரைவழியில் பீரங்கி, எறிகணை, ஏவுகணை, பல்குழல் வெடிகணை ஆகியவற்றைப் பயன்படுத்தி தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றது.

இந்திய அரசு பழுது பார்த்துக் கொடுத்த பலாலி வானூர்தி தளத்தில் இருந்து இயக்கப்படும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இந்திய அரசு தந்துள்ள சக்திவாய்ந்த நாசகார குண்டுகளை முல்லைத்தீவில் தமிழர்கள் மீது வீசி கொன்று குவிக்கின்றது.

உலகத்தில் பல நாடுகள் போரை நிறுத்தச் சொல்லியும் கொலை வெறியன் ராஜபக்ச போரை நிறுத்தவே இல்லை.

இந்திய அரசு இன்றுவரை போரை நிறுத்தச் சொல்லவே இல்லை. தமிழர்கள் இன அழிப்புப் போரை – இந்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் சிங்கள அரசும் கூட்டாக சதிசெய்து – இனப் படுகொலையை நடத்தி வருகின்றது.

இந்தக் கொலை பாதக தாக்குதல்கள் குறித்தோ தமிழர்கள் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படுவது பற்றியோ இன்றுவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இயக்குகின்ற காங்கிரசு கட்சியின் தலைவி சோனியா காந்தி எந்தக் கருத்தையும் கூறவில்லை என்பதில் இருந்தே இந்தத் தமிழினக் கொலைப்பின்னணியில் யார் இருக்கிறார் என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது.

தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் அதிகாரப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட சுயநலத்துக்காக தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி இந்தத் துரோகத்துக்கு முழுக்க முழுக்க உடந்தையாக செயற்பட்டு வந்துள்ளார்.

தற்போது 35,000 தமிழர்களை சிறிலங்கா இராணுவம் சுற்றிவளைத்து சிறைபிடித்து உள்ளது. நேற்று மாத்திரம் 1,400 தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 2,300 பேர் படுகாயமுற்றனர். காயமுற்றோர்க்கு உணவும் இல்லை, மருந்தும் இல்லை, சிகிச்சையும் கிடைக்காமல் சாகின்றனர்.

மேலும் உள்ள தமிழர்களை மொத்தமாகக் கொன்றுகுவிக்க ராஜபக்ச திட்டம் வகுத்து விட்டான். அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க வேண்டும் என்பதுதான் கொடிய நோக்கம்.

இந்தத் திட்டத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்ட கலைஞர் கருணாநிதி அதனால் தமிழகத்தில் ஏற்படும் எதிர்விளைவுகளை கருத்தில் கொண்டுதான் பிரபாகரன் கொல்லப்பட்டால் தான் வருத்தப்படுவேன் என்று ஒரு தொலைக்காட்சியில் கூறினார்.

நாளைய நாள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கூட்டம் கூட இருக்கின்றது. அந்த பாதுகாப்புச் சபையில் இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்துவதற்கு நேரடி நடவடிக்கை எடுக்க முடியும். கொசோவாவிலும், கிழக்கு திமோரிலும் அப்படித்தான் நடவடிக்கை எடுத்தார்கள்.

பாதுகாப்புச் சபையில் போர் நிறுத்தத் தீர்மானம் கொண்டுவர பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவும், பிரான்சும் ஆதரவு அளிக்கின்றன. ரஷ்ய அரசையும், சீன அரசையும் அத்தகைய முடிவுக்கு இசைவளிக்கக்கூடாது என்று இந்திய அரசு தடுக்கின்ற முயற்சியில் கடுமையாக ஈடுபட்டு இருக்கின்றது. அதையும் மீறி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் தலையிட்டால்தான் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியும்.

உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் உள்ளம் பதறித் துடிக்கையில், அழுது புலம்புகையில் இந்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கின்றோம்.

இலங்கையில் போரை இந்த நேரத்திலாவது நிறுத்த ஏற்பாடு செய்யாவிட்டால் விபரீதமான விளைவுகள் ஏற்படும், எதிர்காலத்தில் இந்திய ஒருமைப்பாடு தூள் தூளாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.