ஐ.நா பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் – பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா கோரிக்கை : சீனா எதிர்ப்பு

800px-flag_of_the_peoples_republic_of_china_svgஇலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளில் இந்த மூன்று நாடுகளும் அடங்கியுள்ளன.

சிறிலங்கா அரசாங்கம் யுத்த சூனிய பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, திங்கட்கிழமை நடத்திய அந்தரங்க கூட்டத்தில் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் தூதுவர் விஜய் நம்பியாரிடமிருந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வது பற்றி ஆராய்ந்தது.

இலங்கை பற்றிய அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரித்தானியாவின் கோரிக்கையை ஆதரிப்பதாக அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி அலெஜான்றோ வூல்வ் தெரிவித்திருக்கிறார்.இலங்கை பற்றிய அறிக்கையை பிரான்சே அந்தரங்க கூட்டத்தில் முதலில் கோரியுள்ளது.

இதன்போது மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆராயப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கை சூழ்நிலையை ஒரு விசேட சூழ்நிலையாகக் கருதி பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புப் பேரவையின் தலைவர் குளோட் ஹெலர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிற்கான பிரித்தானியாவின் விசேட தூதுவர் டேஸ் பிறவுண் நியூயோர்க் சென்றிருக்கிறாரா? என்று பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி ஜோன் சவேர்ஸிடம் கேட்டபோது அவர் ஆம் என்று பதிலளித்தார். திங்கட்கிழமை மதியமளவில் பிறவுண் பாதுகாப்பு சபைக்கு செல்லவில்லை. ஆனால், நம்பியாரிடமிருந்து அறிக்கையை பெறுவது என்பதே சபை உறுப்பினர்களின் பொதுவான நோக்கமாக இருந்தது என்று பாதுகாப்பு சபைத் தலைவரான மெக்ஸிகோவை சேர்ந்த குளோட் ஹெலர் தெரிவித்தார்.

இலங்கை விவகாரம் மிக விசேடமானது என்பது எங்களுக்கு தெரியும் என்று குறிப்டபிட்ட அவர், அது பற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் உண்டு என்றும் கூறினார். இலங்கை விவகாரத்தை விசேடமானது என்று கோடி காட்டியமை வட இலங்கையின் கரையோரத்தில் இரத்தக் களரிக்கு பாதுகாப்புச் சபை கொடுக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

மேற்கு சூடான் பிராந்தியமான தர்பூரில் இடம்பெறும் சிறுசிறு சண்டைகள் பற்றி பாதுகாப்பு சபையில் பல கூட்டங்களை நடத்தி ஆராயும் போது இலங்கையில் சிவிலியின்கள் நிறைந்து காணப்படும் பகுதிகளில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் பாதுகாப்பு சபையின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை விடுதலைப் புலிகளை விமர்சித்து பான் கீ மூன் விடுத்த அறிக்கையில் யுத்த சூனிய பிரதேசத்தில் யார் பயங்கர எறிகணை, ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதென தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.