ஆழ வேரோடி, விரிவாக்கமும் உறுதியும் பெறும் இந்திய – சிறிலங்கா இராணுவக் கூட்டு!

20040524134512karunanidhi_sonia2031போர் சார்ந்த விடயங்களில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே இருக்கும் உறவுகள் கடந்த சில வருட காலங்களில் மிகவும் ஆழமான முறையில் வேரோடிச் சென்றுள்ளதாகவும், இந்தியா நேரடியாகவே பல இராணுவம் சார் உதவிகளை சிறிலங்காவிற்குச் செய்து வருவதாகவும் இந்திய இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இந்தியப் பத்திரிகையாளரான சிம்ரன் சொட் (Simran Sodh), ‘தி ஸ்ரேற்ஸ்மன்’ ஏட்டுக்காக எழுதியுள்ள செய்திக்குறிப்பொன்றில் பல புதிய தகவல்களை வெளியிட்டிருக்கின்றார்.

அவர் அதில் முக்கியமாகக் குறிப்பிடுவதாவது:

“சிறிலங்கா இராணுவத்துக்கு கடந்த சில வருடங்களாக இந்தியா வழங்கிய உதவிகளைப் பொறுத்தவரையில் ஆயுதங்களை விற்பனை செய்வது என்பதற்கு மேலாக பிராந்தியத்தில் தன்னுடைய செல்வாக்கைப் பேணிக்கொள்வதற்கான ஒன்றாகவே அது இருந்துள்ளது.

கடந்த சில வருட காலத்தில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான உறவுகள் மிகவும் ஆழமாக வேரூன்றிச் சென்றுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.

புதுடில்லிக்கு கடந்த வருடம் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அங்கு நடைபெற்ற பாதுகாப்புக் கண்காட்சியைப் (Defence Expo) பார்வையிட்டார். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் அவர் மிகவும் நுணுக்கமாகப் பார்வையிட்டார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்புச் செயலாளர் விஜே சிங், கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா, வான்படைத் தளபதி மார்ஷல் பாலி ஹோமி ஆகியோரையும் இந்த புதுடில்லிப் பயணத்தின் போது சரத் பொன்சேகா சந்தித்தார்.

இவர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுக்களின் போது எவ்வாறான கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன என்பது தெரியவரவில்லை. மிசோராமில் உள்ள இந்திய இராணுவத்தின் ‘கிளர்ச்சி முறியடிப்பு மற்றும் காட்டு முறை’ தொடா்பான கல்லூரியிலும் (Indian Army’s Counter Insurgency and Jungle Warfare School), கர்னாடகா பெல்கம் பகுதியில் உள்ள அதிரடிப்படைக் கல்லூரியிலும் இடம்பெற்ற சிறப்பு பாடநெறிகளுக்கு சரத் பொன்சேகா அனுமதிக்கப்பட்டார்.

2005 ஆம் ஆண்டு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் செய்வதற்கு முன்னதாக இந்திரா ரக கதுவீகள் இரண்டை சிறிலங்காவுக்கு இந்தியா விற்பனை செய்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான கடற்பகுதியில் இரண்டு நாடுகளின் கடற்படைகளும் கூட்டிணைந்த வகையிலான சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை கொழும்புடன் பரிமாறிக் கொள்ளும் செயற்பாடுகளையும் புதுடில்லி மேற்கொண்டது.

சிறிலங்காவுடனான ஆயுத வியாபாரங்களை புதுடில்லி எப்போதுமே வரவேற்றது என இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

இவ்வாறு அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா வழங்கிவரும் நேரடி இராணுவ உதவிகளுக்கு மக்கள் அனைவரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார்.

இந்தியா உட்பட பல நட்பு நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தேவையான அனைத்து ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன எனத் தெரிவித்த இராணுவத் தளபதி, இந்த நிலையில் இராணுவத்தினருக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்குவதற்கு அந்த நாடுகள் முன்வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

இதேவேளையில் சிறிலங்காவின் போர் நிலைப்பாட்டுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாகச் செயற்பட்டுள்ளது எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன, இதற்காக இந்திய அரசாங்கத்துக்கு தாம் நன்றியைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

போர் நிறுத்தத்துக்கான அழுத்தத்தைக் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழகத்தில் உள்ள கட்சிகளும் தொடர்ந்தும் வற்புறுத்திவந்த போதிலும், தேர்தல் சமயத்தில் கூட இந்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்துள்ளது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் யாப்பா, அதற்காக சிறிலங்கா இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், “தேர்தல் சமயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படலாம் என நம்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதுடில்லிக்குச் சென்று யுத்த நிறுத்தத்துக்கான அழுத்தத்தைக் கொடுக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டனர் ஆனால், இந்திய அரசு அந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது” எனக் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.