பொதுமக்களை இராணுவமே மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறது. விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு – களத்தில்தான் இருக்கிறார் பிரபாகரன் புலித்தேவன்

Pulithevan

Pulithevan

இலங்கையின் வடக்கே மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் இராணுவம் பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்துகிறது என்று விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது அங்கு நடைபெறும் கடும் மோதல்களில் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பின் சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
தற்போது மோதலற்ற பகுதியில் சிக்கியுள்ள மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் இன்னல்களுக்கும் இலங்கை அரசே பொறுப்பு என்றும் அவர் கூறுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு அறிவித்த 48 மணி நேர மோதல் நிறுத்தம் கேலிக் கூத்தானது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அவ்வாறாக மோதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அங்கு இலங்கை இராணுவம் மோதல் நடவடிக்கைகளை அதிகப்படுத்தியது என்றும் புலித்தேவன் கூறினார்.

ஆயுதப் போராட்டமே இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று கூறிவந்த விடுதலைப் புலிகள் தற்போது ஏன் போர் நிறுத்தத்துக்கான கோரிக்கையை விடுக்கிறார்கள் என்று வினா எழுப்பிய போது, இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக பல செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், தமிழ் மக்களின் நலன்கள் காக்கப்பட வேண்டுமானால் அவர்களின் துன்பம் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு போர் நிறுத்தம் அவசியமாகிறது என்றும் புலித்தேவன் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலையம் என்று அரசு கூறும் பகுதியிலிருந்து மக்களை பலவந்தமாகவே இலங்கை அரசு வெளியேற்றிச் சென்றது என்றும் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தம்முடனேயே இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

களத்தில்தான் இருக்கிறார் பிரபாகரன்

இன்று விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த தயா மாஸ்டரும் மொழிபெயர்ப்பாளருமான ஜார்ஜ் மாஸ்டரும் இராணுவத்திடம் சரணடைந்துள்ளாக இராணுவம் கூறுவது கூட தமக்கு ஊடகங்கள் வாயிலாகாவே தெரிந்தது என்றும் புலித்தேவன் கூறுகிறார்.

அவர்கள் நீண்ட காலமாக ஓய்வில்தான் இருந்தார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மக்களிடையே இருந்தபடி தற்போது நடைபெற்று வரும் போரை வழிநடத்தி வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார். தமது விடுதலைப் போராட்டம் என அவர் கூறும் செயற்பாடுகளை பிரபாகரன் புதிய பரிணாமத்துக்கு எடுத்துச் செல்வார் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.