பிரித்தானியாவில் பரமேஸ்வரனின் உண்ணாநோன்பு 16 வது நாளாக தொடர்கிறது: 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

img_1902இலங்கையில் நடைபெற்றுகொண்டிருக்கும் தமிழினப் படுகொலையை நேரம் தாழ்த்தாது உடனடியாக போர்நிறுத்தம் மூலம் தடுத்து நிறுத்தக்கோரி பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் பிரித்தானிய வாழ் தமிழ் மாணவர்களாலும் மக்களாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 17வது நாளாக நடைபெற்று வருகிறது.

தமிழரின் தன்னெழுச்சியின் ஒரு அங்கமாக இன்று ஒருநாள் பாடசாலைகளை புறக்கணித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமது பாடசாலை சீருடையுடனும் வெள்ளைக் கொடியுடனும் கலந்து கொண்டுள்ளனர்.

மாணவர் வருகை அதிகரித்து வருவதால் கடந்த பல நாட்களாக எம்மக்களுக்கு தர மறுத்த இடத்தை தற்போது உபயோகிக்க அனுமதி வழங்கியுள்ளனர். சிறு பிள்ளைகள் அதிகமாக கலந்து கொண்டிருப்பதால் பிரித்தானிய காவல்துறையிரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் கூடிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை இப்போராட்டம் ஈர்த்திருப்பது அவர்களின் வருகையில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

அத்துடன் இலங்கை அரசினால் தமிழினப் படுகொலை நடக்கிறது என்பதை ஏற்று கொண்ட அவர்கள் தம்மாலான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு உடனடி போர்நிறுத்தத்தை கொண்டுவருவதாக உறுதி அளித்தனர்.

அத்துடன் பரமேஸ்வரனின் கோரிக்கைகளை நிறைவேற்ற எம் அரசினூடாக நடவடிக்கை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

16வது நாளாக தொடரும் பரமேஸ்வரனின் உண்ணாமறுப்பு போராட்டத்திற்கு வருகை தந்த மக்களும் மாணவர்களும் இருகரம் கூப்பி கண்ணீர் மல்க பரமேஸ்வரனை உண்ணா மறுப்பு போராட்டத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தபோதும் அவர் தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் பிரித்தானிய பாராளுமன்றின் முன் உயிர்விடுவதை தவிர வேறுவழியில்லை என உறுதிபட தெரிவித்தார்.

ஈழத்தமிழருக்கு நிம்மதியான சுபீட்சமான வாழ்வு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி அதற்கு பிரித்தானிய அரசு வாக்குறுதிகள் தராமல் உடனடியாக தலையிட்டு போர்நிறுத்தம் கொண்டுவர ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து மாணவர்களினதும் மக்களினதும் ஏகோபித்த கோரிக்கையாக அமைந்ததுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.