சென்னையில் தீக்குளித்து உயிரிழந்தவருக்கு புலிக்கொடி போர்த்தி அஞ்சலி

22-sivanandhan200இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் தீக்குளித்து சிவானந்தன் என்பவர் உயிரிழந்தார்.

இவரது உடலுக்கு விடுதலைப் புலிகளின் கொடியைப் போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக இந்திய இணையதளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவரான சிவானந்தன் (46) சென்னையில் பெயிண்டராக பணியாற்றி வந்தார். கரூரைச் சேர்ந்த இவர் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் நின்றபடி, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

தீப்பற்றி எரிந்த நிலையிலும் இலங்கையில் போரை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தபடி நிலத்தில் விழுந்து உயிரிழந்தார் இவர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்த பொலிசார் அவரைக் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடலில் 80 சதவீதம் அளவுக்குத் தீக்காயம் ஏற்பட்டது. இதனை அறிந்த பழ. நெடுமாறனும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் மருத்துவமனைக்குச் சென்று சிவானந்தனைப் பார்த்தனர்.

இந் நிலையில் சிகிச்சை பலனின்றி சிவானந்தன் உயிரிழந்தார். வாகனம் மூலம் நள்ளிரவில் அவரது உடல் கரூர் கொண்டு வரப்பட்டது. மதிமுக பொதுச் செயாலளர் வைகோ சிவானந்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார். சிவானந்தன் உடலுக்குப் பொலிசார் முன்னிலையிலேயே விடுதலைப் புலிகளின் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறுநாள் காலையில் நடந்த இறுதி ஊர்வலத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பாமக தலைவர் ஜி.கே. மணி, மக்கள் புதிய தமிழகம் நிறுவனத் தலைவர் துரையரசன், இலங்கை எம்பி சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.