இலங்கையுடன் தூதரக உறவை இந்தியா முறிக்காவிட்டால் தனியே தேர்தலைச் சந்திக்க திமுக தயாரா? : ராமதாஸ் கேள்வி

ramadas200_4_1“இலங்கையுடனான தூதரக உறவை இந்தியா முறித்துக் கொள்ளாவிட்டால், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி தனியே தேர்தலைச் சந்திக்கத் திமுக தயாரா?” என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கேயம் பேரூந்து நிலையம் அருகே நேற்றிரவு நடைபெற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக கோவையிலும் இவர் உரையாற்றினார்.

மருத்துவர் ராமதாஸ் மேலும் பேசுகையில்,

“அப்பாவித் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் படுகொலையை இந்திய அரசு தடுத்து நிறுத்தப் போகிறதா, இல்லையா என்பதை அறிய சில நாள்கள் பொறுத்திருப்பதுதான் நல்லது என கருணாநிதி கூறினார்.

அவர் கூறி, 90 நாட்கள் ஆகிவிட்டன. இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என தேர்தல் அறிக்கையில் பாமக வலியுறுத்தியுள்ளது. தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என அதிமுக தெரிவித்துள்ளது.

ஆனால், இதைப்பற்றி திமுகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. இலங்கைத் தமிழர்களுக்காக இருமுறை ஆட்சியை இழந்தோம் என திமுக தலைவர் கருணாநிதி கூறுவது முழுக்க முழுக்கப் பொய். இலங்கைப் பிரச்சினையை மத்திய அமைச்சரவையில் அன்புமணி, ராமதாஸ் விவாதப் பொருளாக ஏன் கொண்டுவரவில்லை என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்பிரச்சினையை விவாதத்துக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு வெளியுறவுத் துறை அல்லது உள்துறைக்கு மட்டுமே இருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக முதல்வர் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ள அவர், தமிழினத் துரோகி என்ற புதிய பட்டத்தையும் பெற்றுவிட்டார்” என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.