இந்திய அரசின் துரோகச் செயல் ஒரு நாள் அம்பலமாகும்: வைகோ

vaiko1இந்திய அரசு தமிழினப் படுகொலைக்கு துணை போய்க் கொண்டிருக்கிறது. தமிழர்கள் சாவது குறித்து அதற்கு கவலை இல்லை. தமிழ் இனத்திற்கே துரோகம் செய்து வருகிறது இந்திய அரசு என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை:

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முக்கிய உறுப்பினர்களும், அமெரிக்காவில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமாவைச் சந்தித்து, இலங்கை ராணுவத்தால் கொல்லப்படும் ஈழத்தமிழரைக் காக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினர்.

இந்தப் பின்னணியில்தான், ஏற்கெனவே ஈழத்தமிழர்களின் துயரம் குறித்து அனுதாபம் கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்டுடன் இணைந்து, ஈழத்தமிழர்களைக் காக்க கூட்டறிக்கையைத் தந்துள்ளனர்.

இரு தரப்பும் உடனடியாக போர் நிறுத்தத்துக்கு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அரசு நடத்தும் இனக்கொலைப் போரை ஒரு கொடிய நோக்கத்துடன் திட்டமிட்டுப் பின்னால் இருந்து இயக்குவதே இந்திய அரசுதான் என்ற உண்மையை, அந்த அரசு செய்துள்ள துரோகத்தை இனியும் மூடி மறைக்க முடியாது.

விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் நோக்கம். அத்திட்டத்தை நிறைவேற்றத்தான் ராணுவ உதவிகளைச் செய்து வருகிறது, போர்நிறுத்தம் வேண்டும் என்று கோராமல் இருக்கிறது.

இந்தப் போரினால் தமிழர்கள் கொல்லப்படுவதைப் பற்றி, இந்திய அரசுக்கு துளி அளவும் கவலையோ, அனுதாபமோ கிடையாது என்பதைத் தமிழக மக்களும், இந்திய மக்களும் என்றாவது ஒருநாள் தெரிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார் வைகோ.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.