சர்வதேச சமூகம் போரை நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்: யாழ் பல்கலைக்கழக ஒன்றியம்

usu-200தமிழ் மக்களைப் பேரழிவுக்கு உள்ளாக்கியிருக்கும் போரை நிறுத்தி, அவர்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யுத்த பிரதேசத்தில் அழிவு, மறுபக்கத்தில் அகதி முகாம்களில் வாடிய வாழ்க்கை, இந்த நிலையில் உள்ள மக்களைக் காப்பாற்றி, நிரந்தரமான அமைதிக்கும், இயல்பான ஒரு வாழ்க்கைக்கும் வழி வகுத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இனவாத போக்கைக் கண்டித்து, போருக்கு முடிவு கட்ட சர்வதேசம் முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அண்மையில் 1500க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் போர் வலயத்திற்குள் பலியாகியிருந்தும் சர்வதேச சமூகம் பாராமுகமாக இருப்பது பெரும் வேதனையளிப்பதாக இருக்கின்றது என கவலை வெளியிட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வன்னிமக்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களினால் தமது மாணவர்கள் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்த நிலையில் அவர்கள் பற்றிய தகவல்களை அறிய முடியாமல் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.