வன்னியிலிருந்து வரும் காயமடைந்தவர்-நோயாளர்களால் நிரம்பிவழியும் வவுனியா வைத்தியசாலை

va_hospita-200வன்னிப்போரில் காயமடைந்த மற்றும் நோயாளர்களினால் நிறைந்து வழிகின்ற வவுனியா பொது வைத்தியசாலை, வைத்தியர், தாதியர் பற்றாக்குறைக்கு மத்தியிலும் இரவு பகலாக வைத்திய சேவையாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைத்தியசாலையில் 448 கட்டில்கள் மட்டுமே இருக்கின்றன. எனினும் 1500க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றார்கள். காயமடைந்தோர், நோயாளர்கள் என நாளாந்தம் இங்கு 400 பேர் வரை கடந்த சில தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாகவும், அதே போன்று கணிசமான தொகையினர் சிகிச்சையின் பின்னர், இடைத்தங்கல் நிவாரண நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையின் 9 ஆம் 10 ஆம் வார்டுகளில் 400க்கும் மேற்பட்ட நோயாளர்களும், 7ஆம் 8 ஆம் வார்டுகளில் 200க்கும் மேற்பட்ட நோயாளர்களும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்ற போதிலும், இவர்களைக் கவனிப்பதற்கு 2 வைத்தியர்கள் மாத்திரமே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைத்தியசாலையில் உள்ள சத்திரசிகிச்சை நிலையத்தில் நாளாந்தம் இரவு ஒரு மணி, இரண்டு மணிவரையில் வைத்தியர்கள் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைத்தியசாலையில் எம்.எஸ்.எவ் எனப்படும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வைத்திய தொண்டு நிறுவன வைத்திய நிபுணர்களும், சுழற்சி முறையில் நாட்டின் தென்பகுதியில் இருந்து வருகின்ற வைத்தியர்களும் மேலதிகமாக இங்கு பணிபுரிகின்றார்கள்.

அத்துடன் ஐசிஆர்சியின் அனுசரணையுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்களும், வவுனியா, மட்டக்களப்பு, சிறி ஜயவர்தனபுர ஆகிய தாதியர் பயிற்சிக் கல்லூரிகளின் மாணவர் குழுக்களும் இங்கு பணியாற்றும் குறைந்த எண்ணிக்கையிலான தாதியர்களுக்கு உதவியாகப் பணியாற்றி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலையில் நிலவுகின்ற இட நெருக்கடி காரணமாக விடுதிகளின் விறாந்தைகள், நடைபாதைகளிலும் நோயாளர்கள் படுத்திருந்து சிகிச்சை பெற நேர்ந்துள்ளது.

இந்த வைத்தியசாலைக்கு மேலதிக கட்டில்கள், ஸ்ரெச்சர்கள், சக்கர நாற்காலிகள் உட்பட பல முக்கியமான உபகரணங்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக அதிகாரிகள் சுகாதார அமைச்சு மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் ஆகியோரது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் மற்றும் தாதியர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.