அம்பாறையில் ரேடார் நிலையம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்

uganthyஅம்பாறை மாவட்டம் உகந்தை பகுதியில் அமைந்திருந்த படையினரின் கடற்கண்காணிப்பு நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று இரவு அதிரடித் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். இதில் ரேடார் அதிவேக விசைப்படகு வெளியிணைப்பு இயந்திரம் அதனோடு சிறிய ரக விசைப்படகு ஆகியன முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட கடலோரப்பகுதி முகாம்களுக்கான விநியோகப் பணிகள் விடுதலைப் புலிகளால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் அறுகம்பை தொடக்கம் உகந்தை வரையிலான கடலோரப்பகுதி படை முகாம்களுக்கான முக்கிய விநியோகப்பணிகள் கடல் மார்க்கமாகவே நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அந்த விநியோகப் பணிகளுக்கு முக்கியமான கடற்கண்காணிப்பு நிலையமாக இந்த ரேடார் நிலையமே செயற்பட்டு வந்தது. இதன் மீது நேற்று சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் அணி தாக்குதல் நடத்தியது.

சுமார் 30 கடல் மைல் தூரம் கண்காணிப்பு செய்யக்கூடியதாக அமைக்கப்பட்டிருந்த ரேடார் அதிவேக விசைப்படகு, வெளியிணைப்பு இயந்திரம் அதனோடு சிறிய ரக விசைப்படகு ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு எரியூட்டப்பட்டன. இத்தாக்குதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன் சில படைக்கருவிகளையும் உபகரணங்களையும் தாம் கைப்பற்றியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். உகந்தை ஆலயப்பகுதியில் அமைந்துள்ள படையினரின் முகாமில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவிலேயே இந்த ரேடார் மத்திய நிலையம் அமைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.