வரலாற்றில் ஒற்றர்களின் பயன்பாடு

ஒற்றர்கள் பற்றிய குறிப்புக்கள் புராதன காலந் தொட்டு இன்றுவரை கிடைக்கின்றன. மக்கள் இனக் குழுக்களாக மாறித் தமது பிணக்குகளைத் தீர்ப்பதற்கு போர் உபாயத்தைப் பயன்படுத்தத் தொடங்கியவுடன்

ஒற்றர்களும் தோன்றிவிட்டார்கள். ஏனென்றால் எதிரியின் பலம், பலவீனம் பற்றிய கணிப்பு இல்லாமல் போரிட முடியாது.

பழம் பெரும் இந்திய மற்றும் சீன மூலோபாயத் தந்திரோபாய நூல்களில் ஒற்றர்கள் பற்றிய விரிவான குறிப்புக்கள் காணப்படுகின்றன. புனித பைபிள் நூலின் பழைய ஏற்பாட்டில் ஒற்றர்கள் ஆற்றிய பணிக் குறிப்புக்கள் உள்ளன. சீன ஆசிரியர் சன் சூ எழுதிய போர் கலை (The Art of War) என்ற நூல் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.

விடுதலைப் புலிகள் இந்த நூலைத் தமிழாக்கம் செய்துள்ளனர். புலிகளின் இராணுவக் கல்லூரி மற்றும் இராணுவப் பயிலகங்களில் அது பாடப் புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. சிங்கள இராணுவத்தினர் சன் சூவின் நூலை ‘யுத்த கலாவ” என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்துள்ளனர். இந்திய இராணுவத்தின் பாடப் புத்தகங்களில் சன் சூவின் நூல் இடம் பெறுகிறது.

சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூல் இந்திய இராசதந்திர மற்றும் உளவுத்துறையினரின் வழிகாட்டியாகவும் ஆதார நூலாகவும் பயன்படுகிறது. புது டில்லியின் இராசதந்திரிகளின் அலுவலகங்களும் விடுதிகளும் உள்ள நகர்ப்பகுதி சாணாக்கியபுரி என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிற நாடுகளுக்குள் ஊடுருவுதல், குழப்பங்களை ஏற்படுத்துதல், நோய்களைப் பரப்புதல், ஆதிக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பல தரப்பட்ட விடயங்கள் அர்த்தசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. மக்கள் தொகை கூடினால் பிற நாடுகளில் குடியேற்றுதல் என்ற விடயமும் அதில் உண்டு.

சாணக்கியரின் மாணவரான மாமன்னர் சந்திரகுப்த மவுரியர் தாராளமாக ஒற்றர்களை சாம்ராச்சிய விரிவாக்கத்திற்குப் பயன் படுத்தினார். ஒற்றர்கள் மூலம் பிற நாட்டு அரசர்களைப் படுகொலை செய்வதற்கும் அவர் தயங்கியதில்லை. இதை அவர் அர்த்தசாத்திர நூல் கூறுவதற்கு அமைவாக செய்தார்.

எகிப்திய மாமன்னர்கள் ஒற்றர்களையும் மிகவும் பலமான உளவுப் பணியகத்தையும் வைத்திருந்ததை வரலாற்றுச் சுவடிகள் அறிவிக்கின்றன. யூதர்களின் சாமராச்சியமும் அதற்கு அடுத்ததாக எழுந்த கிரேக்க ரோம சாம்ராச்சியங்களும் இதேயளவு வளர்ச்சி அடைந்திருந்தன.

கிரேக்க ஜெனரல் தூசிடிடேஸ் (Thucydidas) எழுதிய பெயரிடப் படாத நூலில் இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் எதிரியின் தரை அமைவு பற்றிய ஒற்றர்கள் மூலம் பெறப்பட்ட தரவு மிகவும் முக்கியம் என்றுள்ளார். மகா அலெக்சாந்தர் தனது இராணுவ வெற்றிகளுக்குத் தரை அமைவு பற்றிய கணிப்பீடு முக்கியம் என்று கருதினார்.

வட கிழக்கு ஆசியாவின் மொங்கோலியாவில் இருந்து மத்திய ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் படையெடுத்த தமர்லேன், ஜென்கிஸ் கான் போன்ற மன்னர்கள் ஒற்றர்கள் மூலம் எதிரி நாட்டு நிலவரம் பற்றிய தகவலைச் சேகரித்தார்கள். இது 14,15ம் நூற்றாண்டுகளில் நடந்த நிகழ்ச்சி.

முதலாம் எலிசபெத் மகாராணியின் ஆட்சி 15ம் நூற்றாண்டில் நடந்த போது இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் ஒற்றர்கள் சேவை நன்கு வளர்ச்சி பெற்று உன்னத நிலை அடைந்துள்ளது. நவீன ஒற்றர் முறைமைகளும் உளவுப் பணிகளும் இந்தக் காலத்தில் உருவாகி இன்றைய நிலைக்கு வித்திட்டன.

பனிப்போர் நிலவிய 1945 தொடங்கி 1990 வரையான காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் அரசியல் உளவமைப்பு கேஜீபியும் (KGB) இராணுவ உளவமைப்பு குறூவும் (GRU) அதியுச்ச வளர்ச்சி அடைந்தன. அமெரிக்காவின் வெளிநாட்டு உளவமைப்பு சிஐஏ (CIA) இவற்றின் போட்டி அமைப்பாக இடம் பெற்றது.

உலகின் மிக முக்கியமான உளவுக் கட்டமைப்புக்கள் இருபதாம். நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தோன்றின. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், இஸ்ரேயில், இந்தியா, ஆகியன தமது உளவுச் சேவைகளை நவீனமயப் படுத்தியதோடு நன்கு விரிவுபடுத்தியும் உள்ளன.

ஒற்றர்கள் அவர்களுடைய தனிப்பட்ட திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகிறார்கள். எல்லோராலும் திறமையான ஒற்றர்களாக உருவாக முடியாது. திறமைப் பரிசோதனையில் தேறியவர்களுக்குப் பயிற்சி வழங்கப் படுகிறது.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல் 517.ம் குறள்

இந்தக் குறளில் சொல்லப்பட்ட கருத்து யாதெனில் தொழிலுக்குப் பொருத்தமானவரைத் தெரிவு செய்து அவரிடம் அதை ஒப்படைக்கவும்.

ஒற்றர்களுக்குப் பயிற்சி வழங்குதல் மிகவும் நுட்பமாகச் செய்யப்படுகிறது. உளவுத் தொழில் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பொருத்தமானவர்கள் அந்தந்தப் பிரிவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். பயிற்சியில் மிக முக்கியமான அம்சமாக உண்மையான தகவலையும் பொய்யான தகவலையும் வேறுபடுத்திப் பார்க்கும் திறமை இடம் பெறுகிறது.

எதிரி எமக்குப் பொய்யான தகவலைத் தந்து எம்மை திணறடிக்கத் திட்டமிடுவான். இந்தப் பொறியில் விழாமல் விலகிக் கொள்ளும் பயிற்சி மிகவும் கடினமானது. அனுபவரீதியாக இதைப் பெற முடியும். பொய்த் தகவலை இனங்காணுதல் ஒரு ஒற்றனின் வாழ்க்கைப் பிரச்சினையாகவும் இடம் பெறகிறது.

உண்மையான தகவலைத் தேடிப்  பெற்றுத் தனது நாட்டிற்கு எடுத்துச் செல்வது மாத்திரமே ஒரு ஒற்றனின் முக்கியமான தொழில். மிகுதி அனைத்தும் இரண்டாம் பட்சமே.

“இரகசியம் கசியும் வாயிருந்தால். தேசியம் அழியும் பகைநெருப்பால்”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.