யேர்மனியில் பிரசித்தி பெற்ற கேளின் டோம் (Kölner Dom ) தேவாலயத்தில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்

img_0704உலகிலேயே இருக்கக்கூடிய கிறிஸ்தவ தேவாலயங்களில், அதியுயர்ந்த முதலிரண்டு கோபுரங்களையும் கொண்ட தேவாலயங்கள் யேர்மனியில் உள்ளன. முதலாவது உயர்ந்த கோபுரத்தைக் கொண்ட தேவாலயம் உல்ம் என்கின்ற நகரிலும், இரண்டாவது உயர்ந்த கோபுரத்தைக் கொண்ட தேவாலயம் (முöடn) நகரிலும் அமைந்திருக்கின்றது. யேர்மனிய மக்கள் மட்டுமல்லாது, உலகத்தின் பலபாகங்களிலிருந்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தேவாலயத்தைப் பார்ப்பதற்காகப் பக்தர்களும், உல்லாசப் பயணிகளும் நாள்தோறும் இங்கு பெருந்திரளாக வருவார்கள். இரண்டாவது உலகமகா யுத்தம் நடைபெற்றபோது இத்தேவாலயத்துக்குள் அடைக்கலம் புகுந்த அனைத்து யூதமக்களும் காப்பாற்றப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

இந்தவகையில் 26.04.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணிக்கு இப்பேராலயத்துக்குள் மெதுமெதுவாக உள்நுழைந்த கிறிஸ்தவ, சைவசமய மக்களோடு ஏனைய மார்க்கத்தையும் கொண்ட எமது தமிழ்மக்கள் காலை 10.00மணிக்கு ஆரம்பமான திருப்பலியில் அமைதியாகப் பங்கேற்றனர். திருப்பலியில் பங்கேற்றுக் கொண்ட எமது மக்கள் திருப்பலி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஆலயப் பொறுப்பாளரிடம் வேண்டிக் கொண்டதற்கு அமைவாக இத்திருப்பலியை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருந்த அருட்பணியாளர் எமது தாயகத்தின் உண்மைநிலை தொடர்பாக ஒருசில வார்த்தைகளைக் கூறியதுடன் எமக்காகவும் மன்றாடினார். இத்திருப்பலியில் ஆயிரத்துக்கும் அதிகமான யேர்மனிய மக்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திருப்பலி முடிவடைந்து யேர்மனிய மக்கள் வெளியேறிய நிலையில் எமது மக்கள் ஆயிரத்துக்கும் அதிகமாக இங்கே அமர்ந்திருந்தனர். 12.00மணிக்கு மற்றுமொரு திருப்பலி ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் பேராலயத்துக்குப் பொறுப்பானவர்களில் ஒருவரான அருட்பணியாளர் அசன்பேர்க் அவர்களைத் தனியே சந்தித்து எமது தாயக நிலைமைகளையும், எமது துன்பங்களையும் எடுத்துக்கூறியபோது, இத்திருப்பலியைத் தான் ஒப்புக்கொடுக்கவிருப்பதாகவும் இத்திருப்பலியின் போது எமது விடயங்களைத் தெளிவுபடுத்துவதாகவும், மன்றாடுவதாகவும் உறுதியளித்ததைத் தொடர்ந்து திருப்பலி ஆரம்பமானது. இன்று தாயகத்தில் நடைபெறுகின்ற துன்பங்களைத் தாங்கமுடியாது பெருந்திரளாகத் தமிழ்மக்கள் இந்தத் தேவாலயத்துக்கு வந்திருப்பதாகவும், ஏன் வந்திருக்கின்றார்கள் என்பதையும் திருப்பலி ஆரம்பித்தவுடன் எடுத்துக் கூறியதோடு, மன்றாட்டுக்கு முன்னதாக, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களாக, உண்மைகள் மறைக்கப்பட்ட மக்களாகத் தமிழ் மக்கள் வாழ்வதாகவும், ஊடகங்களும், ஊடகத்துறை சார்ந்தவர்களும் கடமையுணர்வோடு உண்மைகளை வெளிக்கொணர வேண்டுமென்றும், சொந்தங்களைப் பறிகொடுத்ததோடு, அவர்கள் இன்னும் உயிருடன் வாழ்கின்றனரா இல்லையா என்பதை அறியாது மனம்நொந்து தவிக்கின்ற இங்கு கூடியுள்ள மக்களுக்காகவும், அங்கே உயிரிழந்த மக்களுக்காகவும், அல்லற்படுகின்ற மக்களுக்காகவும், நிரந்தர சமாதானம் இலங்கையில் ஏற்பட்டுத் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சமாதானமாகவும் சுதந்திரமாகவும் வாழ இறைவன் வரம்அருள வேண்டுமென இறைவனிடம் வேண்டியதோடு, திருப்பலியின் நிறைவின்போதும் எமக்காக வேண்டிக் கொண்டார். எமது மக்கள் அனைவரும் எங்களது தாயகத்துக்காகவும், அங்குள்ள அனைவரையும் காத்திட வேண்டி இத்திருப்பலியைப் பக்தியுடன் ஒப்புக் கொடுத்தனர்.

திருப்பலி நிறைவுற்றதும் எமது மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் தொடர்ந்து செபித்த வேளையில். நாம் இப்பேராலயத்தில் ஒன்றுகூடி எதைச்செய்யப் போகிறோம் என்பதை அறியாமல் வெளியே பெருந்திரளாகக் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினருக்குப் பொறுப்பான காவற்துறை ஆணையாளரும், சிலவிசேட அதிரடிக் காவற் படையினரும், இன்றையதினம் இத்தேவாலயத்துக்குப் பொறுப்பாகப் பணியாற்றிய குருநிலைக்கு முதல் நிலையில் இருக்கக்கூடிய டியாக்கோனி அவர்களும் நீங்கள் தேவாலயத்துக்குள்ளிருந்து செபிப்பதை நாம் தடுக்க முடியாதென்றும், நீங்கள் செபித்த பின்னர் நாங்கள் ஆலயத்தின் பிரதான வெளிவாயிலின் முன்னுள்ள இடத்தை மாலை 5.00 மணிவரை உங்களுக்கு வழங்குகின்றோம் நீங்கள் உங்களது போராட்டத்தைத் தொடர்ந்து அந்த இடத்தில் நடாத்த அனுமதி தருகின்றோம் என்றும், அங்குவரக்கூடிய அனைத்து மக்களுக்கும் உங்களது பிரச்சனைகளை எடுத்துக் கூறுங்கள் என்றும், தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகத்துறையைச் சார்ந்தவர்களையும் வரவழைத்திருப்பதாகவும் தேவாலயத்துக்குள் வைத்து எமக்கு உறுதிமொழி வழங்கியதை ஏற்று, தேவாலயத்தைவிட்டு வெளியேறி பேராலயத்தின் முன் வெளிவாயிலில் எமது கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்ற போது ஏராளமான யேர்மனிய மக்களுக்கும், அங்குவருகை தந்திருந்த வெளிநாட்டு மக்களுக்கும் எமது தாயகத்தில் நாளும் நடைபெற்று வருகின்ற இனப்படுகொலை தொடர்பான விளக்கங்கள் ஆதாரத்துடன் எமது இளையோரால் வழங்கப்பட்டது. இங்கு உணர்வெழுச்சியுடன் கூடியிருந்த மக்கள் எமது தாயகத்தில் நடைபெறுகின்ற கொடுமைகளின் சாட்சியங்களையும், பதாகைகளையும், எமது தேசியக் கொடியையும் கைகளில் ஏந்தியவாறு கொட்டொலிகளை எழுப்பினர். யூதமக்களுக்கு அடைக்கலம் கொடுத்து அனைத்து யூதமக்களையும் காப்பாற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பேராலயத்தின் உள்ளே பக்தியுடனும், வெளியே உணர்வுடனும் எமது மக்கள் நடத்திய போராட்டம் யேர்மனிய மக்களையும் வேற்றுநாட்டு மக்களையும் எமது பக்கம் திருப்பியதோடு, பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.