பிரபாகரன் தப்பிவிட்டதாக தகவல்:ராணுவம் அதிர்ச்சி!, பிரபாகரன் ஒரு நெருப்பு!

aஇலங்கையில் புதுக்குடியிருப்பை ஒட்டியுள்ள 5 சதுர கி.மீ. நிலப்பரப்புக்குள் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டுள்ளனர். அங்குதான் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருப்பதாக கருதப்பட்டது.பிரபாகரன், நீர்மூழ்கி கப்பல் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கக்கூடும் என்று ராணுவத்திடம் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் மூத்த தலைவர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பிரபாகரனும், அவரது இயக்க மூத்த தலைவர்களும் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கை கப்பல் படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை உயர் அதிகாரி ஒருவர்,

பிரபாகரனின் ஆட்டம் முடிந்து விட்டது. அவரும், அவரது கூட்டாளிகளும் தப்பிச் செல்வதை தடுக்க, அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் கடற்படை உஷார்படுத்தப்பட்டு உள்ளது. 25 கடல் மைல் தூரத்துக்கு கடற்படையின் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் போர்க் கப்பல்கள், அதிவேக தாக்குதல் கப்பல்கள், விரைவு படகுகள், ராடார்கள் ஆகியவை 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அந்தப் பகுதியில் பிரபாகரன் ஒரு படகை இயக்கக் கூட அனுமதிக்க மாட்டோம். இன்று (நேற்று) முல்லைத்தீவு கடல் பகுதியில் கடல் புலிகளின் ஒரு படகை மூழ்கடித்து விட்டோம்.

மேலும், தங்கள் பகுதியில் இருந்து விடுதலைப்புலிகள், ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காகவும், கடற்படை உஷார்படுத்தப்பட்டு உள்ளது என்றூ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, போர் பகுதியில் இருந்து பிரபாகரன் தப்பிச் சென்று விட்டதாக விடுதலைப்புலி வட்டாரங்கள் தெரிவித்ததாக, ஒரு தனியார் டெலிவிஷன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

போர் பகுதியில் பிரபாகரன் தற்போது இருக்க வாய்ப்பு இல்லை என்று விடுதலைப்புலி வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள யாலா காட்டுப்பகுதிக்கு சென்று இருக்கலாம் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்ததாக, அந்த டெலிவிஷன் கூறியுள்ளது. இதனால் இலங்கை ராணுவம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

கிழக்கு மாகாணம் முழுவதும் தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நக்கீரன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.