“காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்” புதுச்சேரியில் சீமான்

seeman1இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரதத்தின்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர் சீமான் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நெல்லையில் நடந்த கூட்டத்திலும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது.

சென்னை ஐகோர்ட்டு சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்தது. இந்த நிலையில் புதுவையில் தொடரப்பட்ட வழக்கில் சீமான் புதுவை கோர்ட்டில் ஜாமீன் கேட்டிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட புதுவை நீதிமன்றம் அவருக்கு கடந்த 24-ந்தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த ஜாமீன் உத்தரவு புதுவை காலாப்பட்டில் உள்ள ஜெயில் அதிகாரிகளிடம் நேற்று வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இயக்குனர் சீமான் நேற்று பிற்பகலில் ஜெயிலைவிட்டு வெளியே வந்தார்.அவரை பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். அவர் நேராக அரியாங்குப்பம் வந்தார். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து இயக்குனர் சீமான் செய்தியாளர்களிடம்:

சட்டம் என்னை விடுதலை செய்துள்ளது. இது தனிப்பட்ட சீமானின் விடுதலை அல்ல. கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி. என் மீது போடப்பட்ட வழக்கு தேவையற்றது. தவறானது.
தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு எதிராக எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், ஆதரித்து பேசக்கூடாது என்ற சர்வாதிகாரம் இருந்தது. அதை எனது வழக்கு உடைத்தெறிந்துள்ளது. எங்களுக்கு கிடைக்க வேண்டியது விடுதலை. அது கிடைக்கும்வரை போராடுவோம்.ஈழ விடுதலையை யார் அங்கீகரிக்கிறார்களோ, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்.தமிழீழத்தை ஆதரிக்கும் இயக்கத்துக்கு ஆதரவு அளிப்போம். இதற்காக பலபேர் பல வடிவத்தில் போராடுகிறார்கள். 13 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர்.
இந்த சமூகத்தை அதிகம் நேசிப்பவர்களை சமூக விரோதிகள் என்கிறார்கள். இதற்கான போராட்டங்களை நடத்தினால் என் போன்றவர்கள் போராட வேண்டியிருக்காது.

காங்கிரசுதான் இனப்பேரழிவுக்கு காரணம். காங்கிரசை வீழ்த்தும்வரை போராடுவோம். அது யாருக்கு சாதகம், பாதகம் என்று பார்க்கமாட்டோம். இலங்கை தமிழர் பற்றி பலரும் பேசும்போது, சோனியாகாந்தி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அதற்கு என்ன அர்த்தம்? 1-ந் தேதிக்கு பின்னர் என்னை கைது செய்த இடத்திலிருந்து பிரச்சாரம் தொடங்குவேன்என்று தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.