சுவீடன் அமைச்சரை தடுத்தது மிகப்பெரிய தவறு ஐரோப்பிய ஒன்றியம் !

swwden-ne-flashசிறீலங்கா அரசு சுவீடிஸ் வெளியுறவு அமைச்சரை வரவேண்டாமென தடுத்தது மிகப்பெரிய தவறு என்று ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசின் இந்தச் செயலானது எதிர் காலத்தில் மேலும் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்றும் தெரிவித்துள்ளது. சுவீடனுடன் மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சிறீலங்காவிற்கு பலத்த உறவுச்சிக்கல் உருவாகும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சுவீடிஸ் வெளியுறவு அமைச்சர் கூறும்போது, ஐ.நா மனிதாபிமான அதிகாரி ஜேம்ஸ் கோம்ஸ் இலங்கை சென்று ஏமாற்றத்துடன் வந்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அந்த நாட்டை தமது நாடு என்று கருதும்படியான தீர்வு ஒன்று முன் வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் கூறிய அவர் இலங்கை அரசு பின்னர் வரும்படி அழைத்த வேண்டுகோளை தாம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இப்போது வரக்கூடாது என்று சொல்லுவதற்கு அந்த நாட்டுக்கு வரக்கூடாது என்று தடுக்கப்பட்ட ஒருவனல்ல நான் என்றும் தெரிவித்தார்.

 அத்தோடு இவரது வரவை தாம் தடுக்கவில்லை என்று சிறீலங்கா தெரிவித்தது.  

கார்ள் பில்ட் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை அரசின் உயரதிகாரி ஒருவர், ஒரே சமயத்தில் பல உயர்மட்ட விஜயங்களை தாங்கள் கையாள்வது கடினமான விடயம் என்று கூறியுள்ளார்.

ஸ்வீடிஷ் வெளியுறவு அமைச்சர் பிறிதொரு சமயத்தில் இலங்கைக்கு வரமுடியும் என இலங்கை அரசு தெரிவித்துள்ள கருத்தை நிராகரித்துள்ள கார்ள் பில்ட், அப்படி செல்லும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் இந்த முடிவானது விசித்திரமான ஒன்று என்று வர்ணித்துள்ள ஸ்வீடிஷ் வெளியுறவு அமைச்சர், தாம் ஒன்றும் அந்த நாட்டுக்கு வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட ஒரு நபர் அல்ல எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களின் நிலை குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், அவர்களின் மனிதாபிமான நிலைமைள் குறித்து இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
முல்லைத்தீவு அகதிகள்
இது தொடர்பில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்ணார்ட் குஷ்னர் ஆகியோரின் விஜயத்துக்கு தமது ஆதரவை அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அதற்கேற்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினரும் தாம் இலங்கையர் என்கிற எண்ணம் ஏற்படும் வகையில் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அங்கு ஸ்திரத்தன்மை ஏற்படப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வர்ணித்துள்ள கார்ள் பில்ட் அவர்கள், அவர்களை நசுக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்துவரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பையும், மனிதாபிமான நிலைமைகளையும் கவனத்தில் எடுக்க வேண்டிய தருணம் இது என்றும் கூறியுள்ளார். அரசியல் தீர்வு ஒன்றும் முன்வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே ஸ்வீடிஷ் அமைச்சருக்கு இலங்கை அரசு நுழைவு அனுமதியை மறுத்துள்ளது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதன் தலைமை பொறுப்பில் இருக்கும் செக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் கேரல் ஸ்வாரன்பர்க், ”இலங்கையின் இந்த முடிவானது மிகப் பெரிய தவறு” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கை ஐரோப்பிய வட்டாரத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கை அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.