ஊட்டி பிரசாரத்தில் கதறிஅழுத வைகோ; பொதுமக்களும் கண்ணீர் விட்டனர்

vaiko-1நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வைகோ கூடலூர், பந்தலூர், நாடுகானி, மசினிகுடி, நஞ்சுகாடு, இத்தலார், எமரால்டு, மஞ்சூர் ஆகிய கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். கூடலூர் காந்தி திடலில் வைகோ பேசியதாவது:-

கூடலூரில் தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்கள் அதிகமாக இருக்கின்றனர். இந்தியாவில் இருந்து ஏராளமான தமிழர்கள் இலங்கைக்கு சென்று அங்கு பொன் விளையும் பூமியாக காபி, ரப்பர் தோட்டங்களை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டனர். 150 ஆண்டுகளுக்கு பிறகு தமிழனுக்கு குடியுரிமை இல்லை என்று கூறி வெளியேற்ற இலங்கை அரசு முற்பட்டது.

கூட்டம் கூட்டமாக சிங்கள அரசு தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. இதற்கெல்லாம் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அரசு ஆயுத உதவிகள், ரேடார், உபகரணங்களை கொடுத்து தமிழ் மக்களை கொன்று குவிக்க உதவி செய்து வருகிறது.

உலக நாடுகளின் தலைவர்கள் ஒபாமா, நெல்சன் மண்டேலா மற்றும் சர்வதேச நாடுகள், இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவிப்பதை தடுக்க கோரியும், இந்திய அரசு இலங்கைக்கு உதவி செய்வதை நிறுத்தவில்லை. நான் பலமுறை சோனியா காந்தி மற்றும் பிரதமரை சந்தித்து ஆயுதம் தரவேண்டாம் என்று கெஞ்சினேன்.

ஆனால் அவர்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆனால் நடப்பதோ விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து பொது மக்கள் வெளியேறி வருவதாக ராணுவம் கூறுகிறது.

ஆனால் அங்கு சிங்கள ராணுவத்தினர் தமிழ் பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழித்தும், பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்து எரித்துக் கொல்கிறார்கள். அதனால் பெண்கள் இழிவாக சாவதை விட பட்டினியால் சாகலாம் என்று கருதுகிறார்கள்.

இலங்கையில் தமிழ் கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்து உள்ளிருக்கும் கருவை வெளியே போட்டு கொல்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. சர்வதேச நிபுணர் குழு இது உண்மை என நரூபித்து 91 சிசுக்களின் உடல்களை கண்டறிந்து உறுதி செய்தது.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உணவின்றி அவதிப்படுகின்றனர். தாய்மார்கள் தன் மார்பக பகுதியை கிழித்து ரத்தத்தை ஒரு வேளை பசிக்கு குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர் என்று பேசியவாரே திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதை கேட்ட பொது மக்களும் கண்ணீர் விட்டு கதறினர். இதனால் பிரசாரம் செய்த இடமே அமைதியானது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.