பிறிதொரு சமயத்திலும் இலங்கை செல்லும் நோக்கம் இல்லை: சுவீடன் வெளியுறவு அமைச்சர்

swedish-foreign-ministerபிறிதொரு சமயத்தில் தான் இலங்கைக்கு வரமுடியும் என இலங்கை அரசு கூறியிருந்தாலும் அப்படிச் செல்லும் நோக்கம் தனக்கு இல்லை என சுவீடன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் கார்ள் பில்ட் கூறியிருக்கின்றார்.
இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்திருப்பதை தொடர்ந்து, இலங்கைக்கான சுவீடன் நாட்டின் தூதுவர் அவசர ஆலோசனைகளுக்காக கொழும்பிலிருந்து சுவீடனுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில், போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்துவதற்காக பிரிட்டன் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இன்று புதன்கிழமை சுவீடிஷ் அமைச்சர் கார்ள் பில்ட் அவர்களும் இலங்கை பயணமாக இருந்தார்.

கார்ள் பில்ட் அவர்களுக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டது என்ற செய்தியை மறுத்துள்ள இலங்கை அரசு அதிகாரி ஒருவர்,.ஒரே சமயத்தில் உயர்மட்ட விஜயங்கள் பலர் இடம் பெறுவதை தாங்கள் சமாளிப்பது கடினம் என்று குறிப்பிட்டுள்ளதாக பி.பி.சி. கூறுகின்றது.

இந்த முடிவை ஒரு விசித்திரமான நடவடிக்கை, என்று விமர்சித்துள்ள அவர் பி.பி.சி. க்கு அளித்த செவ்வியில், ” பிறிதொரு தடவை இலங்கைக்கு வரமுடியும் என்று அவர்கள் சொல்வதற்கு நான் என்ன, அந்த நாட்டுக்கு வரக்கூடாது என்று தடுக்கப்பட்ட ஒருவனா? எவ்வாறாயினும் அவர்களின் அழைப்பை நான் ஏற்கப் போவதில்லை. கொழும்பிலுள்ள எமது தூதரையும் அவசர ஆலோசனைக்கான நான் திரும்பி அழைத்திருக்கிறேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போரில் சிக்குண்டிருக்கும் பொதுமக்கள் பற்றி தாம் மிகவும் கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், உண்மை நிலையை கண்டறியும் பொருட்டு பிரெஞ்சு மற்றும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர்கள் மேற்கொள்ளும் இலங்கை விஜயத்துக்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
அங்கு நிலவி வரும் மனிதாபினான நிலைமை மிகவும் கவலையளிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற போராளிகள் இயக்கத்தை முற்றாக நசுக்க இலங்கை அரசு முனைவது புரிகிறது. ஆனால் அங்கு சிக்குண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் வாழ்வையும் மனிதாபிமான நிலைமைகளை அரசு சற்று கூடுதலாக கவனத்தில் எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு விண்ணப்பிக்கப்படும்.

ஐ நாவின் மனிதாபிமான பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் அங்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். எனவே இலங்கை அரசு அனைத்துலக சமூகத்தின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பது அவசியம் இலங்கையிலுள்ள பொதுமக்கள் அனைவரும், தாம் இலங்கையர் என்கிற உணர்வை ஏற்படுத்தும் சமரச முயற்சியை அரசு தொடங்க வேண்டியது அவசியம் “என்றும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையின் சமூகத்தில் தாமும் ஒரு பங்கினர் என்பதனை சமூகத்தவர் அனைவரும் உணரும் அரசியல் தீர்வு ஒன்றினை இலங்கை அரசு முன்வைக்கும் நடவடிக்கையை தொடங்குவது இப்போது மிகவும் அவரசமாக தேவைப்படும் ஒரு நடவடிக்கை. இந்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை இலங்கையில் ஸ்திர நிலமை ஏற்படப் போவதில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.