ஜெனிவாவில் சிறிலங்கா போர்ப்பிரகடனம்
-
இவ் விடயம் 22. 02. 2012, (வியாழன்),
தமிழீழ நேரம் 9:24க்கு பதிவு செய்யப்பட்டது
- தாயக, இலங்கைச் செய்திகள்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் முக்கியமானதொரு இராஜதந்திரப் போரை தொடங்கியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். போரின் இறுதிக்கட்டத்தில் மீறல்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டி சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள தீர்மானத்தை தோற்கடிக்கவே இந்த இராஜதந்திரப் போர் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 20ம் நாள் ஜெனிவா வந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ஜெனிவாவில் இராஜதந்திரிகளுடனான சந்திப்புகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
அவருடன் சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தனவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலர் சேனுகா செனிவிரத்னவும் இந்தப் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெனிவா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நேற்று, காலைவிருந்தளித்து கலந்துரையாடினார்.
அப்போது அவர், “அமெரிக்கா தலைமையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
தற்போது அமெரிக்கா இந்தத் தீர்மானம் பாதிப்பற்றது என்றும் சிறிலங்கா அதுகுறித்த கவலைப்படத் தேவையில்லை என்றும் கூறுகிறது.
ஆனால் அமெரிக்காவின் பிந்திய நிலைப்பாட்டை சிறிலங்கா ஆதரிக்கவில்லை.
இது சிறிலங்கா விவகாரத்தை அனைத்துலக மயப்படுத்தும். அமெரிக்காவின் தீர்மானம் பாதிப்பற்றது என்பதை நாங்கள் ஆதரிக்கமாட்டோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படத்தத் தவறியுள்ளாக காரணம் காட்டியே அமெரிக்க இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர முனைகிறது.
ஆனால் அதற்கு சிறிலங்காவுக்கு காலஅவகாசம் தேவை என்பதை இராஜதந்திரிகளுக்கு விளக்கவுள்ளோம்.
இநத அறிக்கை டிசம்பர் 17ம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அது ஒரு பண்டிகைக் காலம்.
ஆனால் ஜனவரி 25ம் நாள் எமக்கு எதிரான தீர்மானம் குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.
இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நான்கு வார காலம் போதுமானதா?
சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதற்கான மிகப்பெரிய வேலை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. நாங்களும் சாட்சியங்களை சேகரித்து மதிப்பீடு செய்கிறோம்.
சிறிலங்கா இராணுவம் ஒரு நீதிமன்றத்தை அமைத்து விசாரித்து வருகிறது. அவர்கள் சாட்சிகளிடம் பேசவுள்ளனர்.
இழப்புகளை மதிப்பீடு செய்ய, அந்தப் பகுதி மக்களிடம் சனத்தொகைக் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளவும் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த விவகாரங்களுக்கு உள்ளூர் சூழலிலேயே பதிலளிக்கப்பட வேண்டும்.
அனைத்துலக தலையீடு இந்த நடைமுறைகளில் குழப்பதை மட்டுமே ஏற்படுத்தும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.