24 மணி நேரத்துக்குள் 7தற்கொலைத் தாக்குதல்கள் படையினருக்கு பலத்த சேதம்; முன்னகர்வு தீவிரம் – பிரிகேடியர் தெரிவிப்பு

uthaya nanayakkaraவன்னியில் இராணுவ முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் விடுதலைப் புலிகளால் 7 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் படைத்தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தமது முன்னகர்வு முயற்சியை தீவிரப் படுத்திய படையினர் இரட்டைவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டுள்ள சுமார் 700 மீற்றர் அளவான பாரிய மண்மேட்டினை கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய இராணுவப் பேச்சாளர் மேலும் கூறியதாவது :

தற்கொலைக் குண்டுதாரிகள் நால்வர் மோட்டார் சைக்கிள்களில் வந்து இரண்டு தடவையும் கெப் ரக வாகனத்தில் வந்து ஒரு தடவையும் தாக்குதல்களை நடத்தினர். கடந்த 24 மணிநேரத்தில் 7 தற்கொலைத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு வலயத்தை நோக்கிய முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் படைத்தரப்பில் பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இருப்பினும் புலிகளின் அத்தாக்குதல்களுக்கு மத்தியில் தீவிர முன்னகர்வு முயற்சினை மேற்கொண்ட படையினர் இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாரிய மண்மேடொன்றின் ஒருபகுதியினைக் கைப்பற்றியுள்ளனர். என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.