தமிழீழ தாகத்துடன் உயிரை உருக்கும் பரமேஸ்வரன் உண்ணாநிலை 23 வது நாளாக தொடர்கிறது

parameswaranதமிழீழ தாயகத்தில் மக்கள் 24 மணி நேரம் குழிகளுக்குள் பதுங்கியிருக்க பிரித்தானியாவில் அந்த தமிழர்களுக்கு ஒரு நீதி கிடைக்கவேண்டுமென பரமேஸ்வரன் ஐந்து கோரிக்கைகளுடன் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கி இன்றோடு நாட்கள் 23. தன்னுடைய உயிரை உருக்கி இந்த உண்ணாநிலையை தொடரும் பரமேஸ்வரன் பிரித்தானியா அரசாங்கத்தின் அமைதியான போக்கை கண்டித்து தண்ணீர் அருந்துவதை கடந்த திங்களிலிருந்து நிறுத்தியுள்ளார்.

இதனால் மிகவும் கவலையடைந்த மக்கள் இன்றும் நீண்ட வரிசையில் நின்று அவர் நலன் கருதி வருவதுடன் அவரை தண்ணீர் அருந்தி உண்ணாநிலைப் போராட்டத்தை தொடரும் படி வேண்டுகோள் விடுகின்றனர்.

பரமேஸ்வரனின் உண்ணாநிலை போராட்டத்தாலும் தமிழ் மக்கள் கொல்லப்படுவதாலும் மன பாதிப்புக்குள்ளான பாடாசாலை சிறுவர்கள் இன்றும் பாடசாலையை புறக்கணித்து தங்கள் பாடசாலை சீருடையுடன் கோசங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர். கடைசி ஆண்டு பரீட்சை நடைபெற்று கொண்டிருக்கும் போதும் பல்கலைக்கழக மாணவர்கள் பரமேஸ்வரனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளனர். தொடர்ந்தும் தங்கள் ஆதரவை பரமேஸ்வரன் அண்ணாவுக்கு கொடுப்போம் என தெரித்துள்ளனர்.

தமிழ் மக்களின் இந்த அறவழி போராட்டத்தில் பல வேற்றின மக்களும் இணைந்து மற்றைய மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழ் இனப்படுகொலையை எடுத்துரைத்து தங்களால் இயன்ற பரப்புரையை செய்துவருகின்றனர். இந்த வகையில் கடந்த மூன்று நாட்களாக பிரித்தானியா சோசலிஸ கட்சியின் இளையோர் செயற்குழு தமிழ் மக்களுக்கு ஆதரவாக “சிறிலங்காவில் உடனடி சமாதான பேச்சுவார்த்தை வேண்டும்” என அச்சடிக்கப்பட்ட மேலாடையை அணிந்து துண்டுப்பிரசுரங்களை அந்த வழியால் செல்லும் மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.

இன்றைய பிரித்தானியா நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சிறிலங்கா பிரச்சனை முக்கியமாக எடுத்துகொள்ளப்பட்டது. இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் Edward David கருத்து தெரிவிக்கையில் சிறிலங்காவில் இடம்பெறுவது இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்த சட்ட ஆலோசனை எடுக்கவேண்டும் என்றும் கடந்த காலத்தில் நலன்புரி முகாம்களில் இருக்க வைக்கப்பட்டவர்கள் இதுவரை காலம் அவர்கள் சொந்த இடத்தில் திரும்ப குடியமர்த்தப்படவில்லை என்றும் கூறினார்.

சிறிலங்கா பிரச்சனைக்கு அரசியல் தீர்வே சரியானது என்பதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆமோதித்துள்ளனர். விடுதலைப்புலிகளை அழிப்பதால் இந்த பிரச்சனை தீராது புதிய அமைப்புகள் உருவாக்கப்படாலாம் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் Keith Vas கேட்டுகொண்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.