பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் – கோத்தபாய ராஜபக்ஷ

kottapayaபிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவரது அண்மைய இலங்கை விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் இலங்கை விஜயம் தொடர்பில் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த விசேட பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்

கூட்டத்தின்போது பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் பல தடவைகள் இடையூறுகளை விளைவித்தார். அது அவருடைய போக்காக இருக்கலாம். எனக்கு அவரது நடத்தையோ அல்லது அவரது போக்கோ குறித்து ஆட்சேபனை இல்லை.

எனது விடயம் என்னவெனில் தற்போதைய நிலைமையில் எதற்காக அவர் இதில் தலையிட வேண்டும் என்பதேயாகும். இந்த நாட்டின் மக்கள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை அங்கீகரித்துள்ளனர்.

நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர் நாட்டு மக்கள் கூறுவதையே செவிமடுக்கவேண்டும். அதனைவிடுத்து பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் கூறுவதையல்ல. இதனைத்தான் நான் அவருக்கு கூறினேன் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேற்குல நாடுகளில் வசித்துவரும் புலம்பெயர் இலங்கை தமிழர்களை திருப்திபடுத்தும் நோக்கில் ஐரோப்பிய தலைவர்கள் தேவையற்ற வகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

புலம்பெயர் தமிழ் மக்களை திருப்திபடுத்தும் நோக்கிலேயே ஐரோப்பிய இராஜதந்திரிகள் இலங்கைக்கு விரைவதாகவும் தமிழ் மக்கள் மீதான கரிசனை எதுவும் அவர்களுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் பொது மக்கள் மீது எறிகணை தாக்குதல் நடத்தவதாக பி.பி.சீ.யை மேற்கோள்காட்டி வெளிவிவகார அமைச்சர் மிலிபான்ட் வெளியிட்ட கருத்தின் காரணமாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் மிலிபான்டுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பி.பி.சி. உலக சேவை புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவதாக கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். பிரிட்டன் பிரதமர் கோர்டவுன் பிறவுன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் மற்றும் ஜீ. 8 நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இலங்கை தமிழர்கள் தொடர்பில் காட்டும் கரிசனை வெறும் அரசியல் நோக்கங்களை கொண்டது எனவும் மக்கள் தொடர்பான உண்மையான கரிசனை எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.