ஏறாவூர் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் கடத்தல்

eravurமட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார். கடந்த மூன்று நாட்களுக்குமுன் தனது வீட்டிலிருந்து வைத்தியசாலைக்குச் சென்றபோதே இவர் காணாமல்போயுள்ளார். ஏறாவூர் -5 விரபத்திரர் கோயிலடியில் வசித்துவரும் 15 வயதான சுதன் என்றழைக்கப்படும் வள்ளுவன் ஜீவகுமார் என்ற மாணவனே காணாமல் போயுள்ளவராவார்.

ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயத்தில் கல்விகற்கும் இவர் சம்பவதினம் தனது காயத்திற்கு மருந்து கட்டுவதற்காக வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் இதன்போதே இவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வீதியில் சென்றுகொண்டிருந்த பொழுது. வீதியில் நின்ற விசேட அதிரடிப்படையினர் இவரை மறித்து கதைத்துக்கொண்டிருந்ததை தான் கண்டதாக அப்பிரதேசத்தில் ஓட்டோ ஓட்டுனர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விசேட அதிரடிப்படையினரின் முகாமுக்குச் சென்ற குடும்பத்தினர் மாணவர் தொடர்பான விபரங்களை கோரியுள்ளனர். எதற்கும் மூன்று நாட்களின் பின்பே தம்மால் முடிவு கூறமுடியுமென்றும். அதுவரை எவருக்கும் இது தொடர்பான தகவல்கள் எதனையும் வழங்கவேண்டாமென்றும் விசேட அதிரடிப்படையயினர் கூறி அனுப்பியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுதொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையிடப்பட்டுள்ளது. நேற்று இப்பிரதேசம் முற்றாக விசேட அதிரடிப்படையினராhல் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெருடலுக்காக மட்டக்களப்பில் இருந்து மீனகன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.