இரட்டைவாய்க்கால் பகுதியில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: கடும் மோதலில் 150 படையினர் பலி

vanniமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்புக்கு கிழக்காக உள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் நேற்று வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாக மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 150 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் வன்னி சமர் – கட்டளைப் பீடத்தை மேற்கோள் காட்டி ‘புதினம்’ செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளதாவது:

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சுற்றிவளைத்துள்ள படையினர் கடல் மற்றும் தரைவழியாக அதற்குள் நுழைவதற்காக பெரும் எடுப்பிலான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

தரைவழியாக மூன்று முனைகளில் முன்னேறுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ள படையினர், முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையின் தாக்குதல்கள் மூலம் தரை இறக்கம் ஒன்றை மேற்கொள்ளவும் முயற்சிக்கின்றனர்.

தரைவழியாக முன்நகர முனையும் சிறிலங்கா படையினரின் ஒரு அணி இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை வரை பத்து தடவைகள் முன்நகர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

செறிவான எறிகணைத் தாக்குதல்களின் மத்தியிலேயே படையினரின் இந்த முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டனர்.

படையினரின் முன்நகர்வுக்கு எதிராக கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடுத்த விடுதலைப் புலிகள், படையினரின் முயற்சியை முறியடித்ததுடன், அவர்களுக்கு பாரிய இழப்பையும் ஏற்படுத்தியியிருக்கின்றனர்.

நேருக்கு நேராக இடம்பெற்ற இந்தச் சமரில் 150 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர் என ‘புதினம்’ செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமையில் இருந்து நேற்று முன்னாள் வரை நான்கு நாட்களாக இந்த முனையில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா படையினரின் முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் தடுக்கப்பட்டதாக கொழும்பு படைத்துறைச் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் கரும்புலித் தாக்குதல்கள் சிலவும் இடம்பெற்றிருக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வன்னி போர் முனையில் விடுதலைப் புலிகள் ஏழு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இரட்டைவாய்க்கால் பகுதியிலும் இராணுவ ட்றக் வாகனம் ஒன்றில் வெடிபொருட்களை நிரப்பிக்கொண்டு வந்த கரும்புலிகள் அதனை வெடிக்கவைத்ததில் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தின் இறுதி நான்கு நாட்களிலும் படை முன்நகர்வுகள் தடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்ட தாக்குதல்களில் படைத்தரப்பில் 600 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்தும் பல முனைகளில் படை முன்நகர்வுகளும் முறியடிப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. இதனால் வன்னிப் பகுதி அதிர்ந்து கொண்டிருக்கின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.