கடத்தப்பட்ட சிறுமி உருக்குலைந்த நிலையில் உடலமாக மீட்பு: மட்டக்களப்பில் அதிர்ச்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வார தொடக்கத்தில் மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 3 பாடசாலை மாணவர்களில் ஒருவரான 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழம காலை உடலமாக மீட்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பில் பெரும் பதற்றமும் அச்சமும் தோன்றியிருக்கின்றது.

கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் 3 ஆம் தர மாணவி சதீஷ்குமார் தினுஷிகா (வயது 9) கடந்த செவ்வாய்கிழமை காணாமல் போயிருந்தார்.

கடந்த செவ்வாய்கிழமை பாடசாலைக்குச் சென்ற இந்தச் சிறுமியை பாடசாலை முடிவடைந்தபோது அடையாளம் தெரியாத யாரோ வந்து அழைத்துச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

உயர்கல்வி ஆசிரியரான இந்தச் சிறுமியின் தந்தை சதீஷ்குமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆயுதக்குழு ஒன்றினால் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போய்விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சிறுமியும் காணாமல் போயிருப்பதால் அதிர்ச்சியடைந்திருந்த குடும்பத்தினர் அவர் கடந்த நான்கு நாட்களாகத் தேடிவந்தனர். காவல்துறைக்கும் இது தொடர்பாகத் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலயில் மட்டக்களப்பு நகரில் உள்ள பாரதி வீதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இவரது உடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கிடைத்த தகவல் ஒன்றையடுத்தே காவல்துறையினர் உடலத்தை மீட்டுள்ளனர். நீதவான் விசாரணைகளும் அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டது.

பிரேத பரிசோனைக்கு உத்தரவிட்டுள்ள நீதவான், விசாரணைகள் தொடங்குமாறு காவல்துறையினரையும் பணித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.