ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றே எதிர்பார்க்கப்படுகிறது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

tna_logoஅனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றையே இலங்கை அரசாங்கத்திடம் எதிர்பார்த்திருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.  இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை திணிப்பதற்கு அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ முற்படக் கூடாது என இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அவ்வாறு திணிக்க முயற்சித்தால் போராட்டம் தொடரும் எனக் கூறினார்.

“வன்னியில் தொடரும் எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களால் ஒரு வாரத்தில் 733 பேர் கொல்லப்பட்டதுடன், 2615 பேர் காயமடைந்துள்ளனர்” என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என அரசாங்கம் கூறினாலும், வன்னியில் தமிழினம் அழிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“யுத்த நடவடிக்கைகளால் தமிழர்களின் பெருமளவு நிலம் கைப்பற்றப்படுகிறது. யாழ்ப்பாணம், திருகோணமலை உட்பட ஏனைய பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழர்களின் நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

அத்துடன், வன்னியில் நடத்தப்படும் தாக்குதல்களில் 300 சிறுவர்கள் கைகள் மற்றும் கால்களை இழந்திருப்பதாகக் குறிப்பிட்ட பிரேமச்சந்திரன், காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களுடன் தங்குவதற்குப் பெற்றோரோ உறவினர்களோ பாதுகாப்புத் தரப்பினரால் அனுமதிக்கப்படவில்லையெனத் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாகவும், முகாம்கள் சிறைச்சாலைகள் போன்று காணப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.