இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவியை நிதியாக எதிர்பார்க்கும் சிறிலங்கா, பொருளாக வழங்க முனையும் உலகம்

flag-sri-lankaபோரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க நோர்வே, இந்தியா, சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் முன் வந்துள்ளன. இம்முறை பல நாடுகள் சிறிலங்காவிடம் நிதியாக வழங்காமல் சர்வதேச தொண்டர் அமைபப்புக்கள் ஊடாக பொருட்களை வழங்க முனைந்துள்ளதை காணமுடிகின்றது.

நோர்வே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்புகள் ஊடாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நோர்வே உயர் ஸ்தானிகராயப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேவை ஏற்படின் மேலும் உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இடம் பெயர்ந்துள்ள மக்களின் உடனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜப்பான் 4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்க முன் வந்துள்ளது. அதனை யு.என்.எச்.சி.ஆர் ,ஐ.சி.ஆர்.சி., யுனிசெப், புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றின் ஊடகவே வழங்கத் தீர்மானித்துள்ளது.

அவசர மனிதாபிமான உதவிகளுக்காக 1.23 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை வழங்க சுவிஸ் முன்வந்துள்ளது. ஐ.சி.ஆர்.சி., உலக உணவுத் திட்டம், மற்றும் யு.என்.எச்.சி.ஆர். ஆகியன ஊடாகவே இதனை வழங்கப் போவதாக அது அறிவித்துள்ளது.

வைத்திய உதவிகளை விஸ்தரிக்கும் வகையில் பிரான்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு தன்னார்வ தொண்டர் அமைப்பொன்றும் உதவ முன் வந்துள்ளதாக சிறிலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் 100 மில்லியன் ரூபா செலவில் செட்டிக்குளத்தில் 35 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையொன்று பிரான்ஸ் அரசாங்கத்தினாலும், எம்.எஸ்.எப். எனப்படும் எல்லைகள் அற்ற பிரான்ஸ் வைத்திய அமைப்பு 100 படுக்கைகளைக் கொண்ட வைத்தியசாலை ஒன்றை மெனிக் பார்ம் முகாமிலும் அமைக்க முன் வந்துள்ளன. இது தொடர்பான உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டதாக சிறிலங்கா அமைச்சின் பேச்சாளர் டபிள்யு.எம்.டி. வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளபோதும் அவர்களும் பொருட்களாவே உதவி செய்ய முனைந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே திருகோணமலை புல்மோட்டையில் தள வைத்தியசாலையொன்றையும், இராணுவ மருத்துவர்களையும் மருத்துவ உதவிகளையும் வழங்கி உதவியுள்ள இந்தியா, மேலும் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்க முன் வந்துள்ளது. இதன் பிரகாரம் 40 ஆயிரம் குடும்பங்களுக்குரிய உதவிப் பொதிகள் ஏற்கனவே இடம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, மேலும் 50 ஆயிரம் பொதிகள் விரைவில் வந்தடையவிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்கா இடம்பெயர்ந்த தமிழ் அகதிகளைக் காண்பித்து உலக நாடுகளில் நிதிகளை பெற்றுக்கொள்ள பெரும் பகிரதப்பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், நாடுகள் பல பொருளாக நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையும் வகையில் வழங்க முனைவதால் என்ன செய்வதென்று தெரியாது தவிக்கின்றது என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.