> ஈழத் தமிழர்களுக்கு அளித்த தனி ஈழமே தீர்வு என்ற வாக்குறுதியை நிச்சயம் காப்பேன்: ஜெயலலிதா

Jayalalithaa

Jayalalithaa

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனித் தமிழீழம் மட்டுமே தீர்வு என்றும் அதனை அமைத்தே தீருவேன் என்றும் தான் அளித்த வாக்குறுதியை நிச்சயம் காப்பேன் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து இன்று நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ஈழத் தமிழர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற தனது கூட்டணிக்கு வாக்களித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தனி ஈழமே தீர்வு என்று தான் கூறியதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து குவியும் பாராட்டுக் கடிதங்கள் குறித்து இக்கூட்டத்தில் குறிப்பிட்ட ஜெயலலிதா, சுவிட்சர்லாந்து தமிழ் பேரவை அனுப்பியிருந்த கடிதத்தை கூட்டத்தினருக்குப் படித்துக் காட்டினார்.

“இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழமே ஒரே தீர்வு என்று துணிச்சலாக, பகிரங்கமாக, அச்சமின்றி நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி என்று எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் செய்திகளை அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள்.

எங்களுக்கு மிகுந்த ஆறுதல் தருவதாக உங்கள் ஈழப் பிரகடனம் அமைந்திருக்கிறது என்று நன்றி சொல்லி கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் இப்படி உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் வேளையில், நம் கைக்கெட்டிய தூரத்தில், கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாழுகின்ற தமிழர்களைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாது மத்திய, மாநில அரசுகள் கபட நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. இரண்டு ஆண்டுகளாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

போரில் கொல்லப்படுவதெல்லாம் அப்பாவி பொதுமக்களாக இருக்கிறார்கள். இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ஆயுதமும், பயிற்சியும் தருவதாகக் கூறப்படுகிறது. இது அநியாயம், அக்கிரமம், நம்முடைய பெருமைக்கு உகந்ததல்ல, இதைச் செய்யாதீர்கள் என்று எத்தனையோ முறை நாம் எடுத்துக் கூறினோம்.
ஆனால் மத்திய அரசும், கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க. அரசும் அரசும் அம்மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் மக்களை ஏமாற்ற ஒவ்வொரு நாளும் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களின் துயரத்திற்கு முடிவு ஏற்பட தனி ஈழம் அமைவதுதான் ஒரே வழி, ஒரே தீர்வு. அதை நான் செய்து முடிப்பேன். வங்காள தேசம் உருவாக பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியப் படையை இந்திரா காந்தி அனுப்பியது நியாயமென்றால், எங்கள் தமிழர் நலன் காக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதும் நியாயமே. அதை நான் செய்து முடிப்பேன் என்று நான் பிரகடனம் செய்தேன். அதைப் பாராட்டித்தான் உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் எனக்கு நன்றி செய்திகளையும், வாழ்த்துகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகிய நான் ஒன்றைச் சொன்னால் அதைச் செய்து முடிப்பேன் என்று உலகத் தமிழனம் நம்புகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டு தமிழர்ப் பேரவை எனக்கு அனுப்பியிருக்கும் செய்தியைக் கேளுங்கள் :

அம்மா, தாய்மை உள்ளம் கொண்ட நீங்கள் கொண்ட கொள்கையில் இருந்து கிஞ்சித்தும் விலகாத உறுதியான குணம் உடையவர் என்று அறியப்பட்டவர். நீங்கள் கூறும் வார்த்தைகள் உங்கள் உதட்டில் இருந்து அல்லாமல், அடிமனதில் இருந்து வந்ததாக நாங்கள் முழுமனதாக நம்புகிறோம். உங்களின் வார்த்தைகள் மூலம் எங்களுக்கு பெரிய ஆன்ம பலம் கிட்டியிருக்கிறது. தங்களுக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி என்று Consortium of Tamil Diaspora Organizations in Switzerland என்ற அமைப்பு எனக்கு செய்தி அனுப்பியிருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற நீங்கள் எனக்கு உதவவேண்டும். அதாவது நீங்கள் எனக்கு வாக்களித்து உதவவேண்டும். உலகத் தமிழர்களுக்கெல்லாம் இருக்கின்ற உணர்வைப் போல நீங்களும் உணர்வு கொண்டு எழவேண்டும்.

இலங்கைத் தமிழர் நலன் காக்கப்பட வேண்டுமென்றால் என் கரத்தை நீங்கள் பலப்படுத்த வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாம் நாடாள வேண்டும். உங்கள் வாக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வேண்டும் வேண்டும் வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜெயலலிதா பேசினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.