சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுதங்கள் கொண்டு சென்ற இராணுவ வாகனங்கள் கோவையில் எரித்தழிப்பு

lorry-arrav-150x1051கோவை அருகே, சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுதங்கள் கொண்டு போகப்படுவதாக பரவிய தகவலைத் தொடர்ந்து இராணுவத்தினர் வந்த வாகனத்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி தாக்கினர். இராணுவ வண்டிகளையும் தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் இந்திய இராணுவ முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத்துக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தனர். பின்னர் அங்கு பயிற்சியை முடித்து விட்டு இன்று கொச்சி வழியாக கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 60 வாகனங்களில் அவர்கள் வந்தனர்.

இந்த நிலையில், அந்த வாகனங்களில் சிறிலங்காப் படையினருக்கான ஆயுதங்கள் கொண்டு போகப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து பெரியார் திராவிடக் கழகத்தினர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் அங்கு விரைந்தனர்.

நீலாம்பூர் பைபாஸ் சாலையில், இராணுவ வாகனங்களை தடுத்து நிறுத்தி தாக்குதலில் இறங்கினர். இராணுவ வண்டிகளில் இருந்த பொருட்களை எடுத்து கீழே வீசி சேதப்படுத்தினர். பின்னர் சிலர் வாகனங்களுக்குத் தீவைத்தனர். இதி்ல் 5 பாரவண்டிகள் தீயில் சேதமடைந்தன. இதையடுத்து இராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை மீது தடியடி நடத்த ஆரம்பித்தனர்.

சரமாரியாக கண்களில் பட்டவர்களையெல்லாம் அவர்கள் தடிகளால் அடித்து விரட்டினர். இதில் பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்தனர். அந்தப் பகுதியே கலவரம் நடந்த பகுதி போல காணப்பட்டது.

இராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர். இராணுவ வாகனங்களைத் தாக்கியதும், இராணுவ வீரர்களைத் தாக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை காவல்துறை கூடுதல் இயக்குநர் கூறுகையில், இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பப்படுவதாக இராணுவ வாகனங்களை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கியுள்ளனர். அக்கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். கலகம் விளைவிக்கும் நோக்கத்துடன் வாகனத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.