நான் நினைத்தால் இரவோடிரவாக உங்கள் பத்திரிகைகளை இழுத்து மூடிவிட முடியும் ‐ யாழ் குடாநாட்டில் தொடரும் ஊடகங்களுக்கு எதிரான பயங்கரவாதம்

Media Censoring

Media Censoring

அவர்கள் அதிர்ந்து போய் கேட்டுக்கொண்டிருந்தனர்; கைகளை சொடுக்கிய படி அவர் உரத்துக்கூறினார். நான் நினைத்தால் இரவோடிரவாக உங்கள் பத்திரிகைகளை இழுத்து மூடிவிட முடியும்.

பலாலி அழைத்துச்செல்ல பயன்பட்ட இராணுவ வாகனங்கள் வெளியே காத்திருந்தன. குடாநாட்டிலிருந்து வெளிவரும் உதயன், யாழ்.தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகைகளின் ஆசிரியர்கள் அவர்கள் அவரது மேசைக்கு முன்னாலுள்ள கதிரையில் சொல்வதற்கு ஏதுமின்றி வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தனர்.

இவ்வளவு எச்சரித்தவர் யாழ்.மாவட்ட இராணுவ தளபதியாக இருந்து தற்போது இராணுவ தலைமைய அதிகாரியாகவும், தற்போது தான் வன்னியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்களுக்கு மறு வாழ்வளிக்கும் குழு தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்;டிருக்கும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி என நான் இக்கட்டுரையில் எழுதப்போவதில்லை. அதை எழுதிப்போய் நான் இனந்தெரியாதோரால் கொல்லப்படவோ அல்லது இரவோடிரவாக கடத்தப்பட்டு காணாமல் போகவோ தயாரில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சொன்னதை எனக்கு சொன்னதற்காக அந்த நாளிதழ்களின் ஆசிரியர்களுக்கும் அவ்வாறானதோர் நிலை ஏற்படாது காப்பாற்றவேண்டும். அது ஊடகவியலின் அடிப்படை தர்மமும் நியாயமும் ஆகும்.

அவர் தொடர்ந்தார் நீங்கள் குடாநாட்டினில் மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்மிடையேயுள்ள உறவை (?) சீர்குலைக்க முற்படுகிறீர்கள். நான் நினைத்தால் இன்று இரவோடிரவாக உங்கள் பத்திரிகைகளை மூடிவிட முடியும். நாங்கள் தான் உங்களுக்கு அச்சிடுவதற்கான கடதாசியை கூட கொழும்பிலிருந்து கொண்டு வர உதவுகின்றோம். மக்களுக்கு பாதுகாப்பு படையினர் செய்யும் சேவைகளை(?) பற்றி நீங்கள் எழுதுவதேயில்லை. நாங்கள் யாழ்ப்பாண மக்களுக்கு எவ்வளவோ செய்கின்றோம். நீங்கள் அதுபற்றி எல்லாம் எழுதவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்து நாளிதழ்களின் ஆசிரியர்களுக்கோ, அங்குள்ள ஊடகவியலாளர்களிற்கோ இவ்வாறான அச்சுறுத்தலொன்றும் புதிது இல்லை. 1981, ஜீன் இனில் ஈழநாடு பத்திரிகை தீக்கிரையாக்கப்பட்டது முதல் இந்திய அமைதிப்படை காலத்தினில் முரசொலி மற்றும் ஈழமுரசு குண்டுவைத்து தகர்ப்பு என தொடர்ந்து தற்போது உதயன் அலுவலகத்தினுள் உள்ளே புகுந்து படுகொலைகள் கைக்குண்டு வீச்சு என அவை தொடர்கின்றது.

ஊடக அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் என ஆரம்பித்த இக்கலாச்சாரம் பின்னர் ஊடகவியலாளர்களை படுகொலை செய்தலாக பரிணமித்தது. குடாநாட்டு ஊடகத்துறையில், வெளி உலகிற்கு தெரியவரும் வகையிலான முதல் ஊடகவியலாளர் படுகொலை 2000 ஆம் ஆண்டின் ஒக்டோபர் 19 இனில் அரங்கேறியது.

பி.பி.சி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் பலவற்றிலும் சூரியன் எவ் எம்மிலும் சுயாதீன செய்தியாளராக பணியாற்றி வந்த மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அரச ஆதரவு தமிழ் ஆயுத குழுவான ஈ.பி.டி.பி மீது இப்படுகொலைக்கான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது.

ஆயினும் இந்திய அமைதிப்படை பிரசன்னமாகியிருந்த காலப்பகுதியில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த முரசொலி நாளிதழின் ஆசிரியரான எஸ்.திருச்செல்வம் மீது படுகொலை முயற்சியொன்று இடம்பெற்றிருந்தது.

எனினும் அம்முயற்சியினில் அவர் தப்பித்துக்கொள்ள 19 வயதுடைய பாடசாலை மாணவனான அவரது மகன் அகிலன் பலியெடுக்கப்பட்டான்.

எனினும் பின்னர் நிமலராஜனை தொடர்ந்து உதயன் நாளிதழின் அலுவலக செய்தியாளர் செல்வராசா ரஜிவர்மன் சாளரம் மாணவர் இதழின் ஆசிரியர் சகாதேவன் நிலக்ஷன் மற்றும் சக்தி தொலைக்காட்சி,வானொலி ஊடகவியலாளரான பரநிருபசிங்கம் தேவகுமார் ஆகியோர் 2007‐2008 ஆம் அண்டுகளில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

2006 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 11 முதல் விடுதலைப்புலிகளிற்கும் படையினரிற்குமிடையே முன்னரங்க நிலைகளில் மீண்டும் மோதல்கள் வெடித்திருந்தன. ஏ‐9 வீதியூடான தரைவழிபோக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குடாநாடு திறந்த வெளிச்சிறை போன்றானது. அதேவேளை குடாநாட்டின் ஊடகத்துறையும் இருண்டதோர் சூழலை நோக்கி இழுத்துச்செல்லப்பட்டது.
2007 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத காலப்பகுதியியினில் வடமராட்சியின் கலிகைச்சந்திப்பகுதியினில் வைத்து மற்றுமொரு சுயாதீன செய்தியாளரான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் கடத்தப்பட்டார். படையினரால் இவர் விசாரணைக்கென தடுத்துவைக்கப்பட்டிருந்ததை நேரில் கண்ட சாட்சிகள் உண்டு. ஆனாலும் இன்று வரை இராமச்சந்திரன் வீடு திரும்பியிருக்கவில்லை.

1996 ஆம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரின் கைகளில் வீழ்ந்த பின்னர் ஊடகத்துறையை நிர்ணயிப்பதில் ஊடகவியலாளர்களுக்கப்பால் அவ்வப்போது பதவியேற்கும் இராணுவ தளபதிகளே முக்கியமானவர்களாயினர்.

குறிப்பாக முற்றுமுழுதாக இராணுவ பிரசன்னம் மிக்க யாழ்.நகரப்பகுதியில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குடாநாட்டு மொத்த ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பை கேள்விக்குறியர்க்கியிருந்த�
�ு. 1987 முதல் 1990 ஆம் ஆண்டின் முற்பகுதி வரையில் இந்திய அமைதிப்படையின் பிரசன்ன காலத்தினில் இருந்தது போன்று ஊடகத்துறைக்கு இருண்ட யுகமொன்று மீண்டும் ஆரம்பமானது.

யாழ்.குடாநாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் குடாநாடு தொலைதொடர்பு வசதிகளில் மேம்பட ஆரம்பித்திருந்தது. எனினும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழான 1990 முதல் 96 வரையான காலப்பகுதியில் இத்தொலை தொடர்பு வசதிகள் அரசால் முற்றாக துண்டிக்கப்பட்டேயிருந்தது. இந்நிலையில் குடாநாட்டினில் ஊடகவியலாளர்கள் இர பகுதிகளாக செயற்படலாயினர். உள்ளுரிலிருந்து வெளிவந்த நாளிதழ்களுடன் தொடர்புபட்டு ஒரு வகையினரும், கொழும்பு மற்றும் சர்வதேச ஊடகங்களிற்கு பணியாற்றும் சுயாதீன ஊடகவியலாளர்களென மற்றொரு பகுதியினராகவும் வகைப்பட்டனர்;.

எனினும் நிமலராஜன் படுகொலை, சுயாதீன ஊடகத்துறையின் வளர்ச்சியை மீண்டும் தடுத்து நிறுத்தியது. கணிசமான சுயாதீன ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். மற்றுமொரு பகுதியினர் ஊடகத்துறையிலிருந்து விலகிக்கொண்டனர்.

ஆயினும் அரசு‐புலிகளிற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமும், அதன் பின்னரான சில வருடங்களும் குடாநாட்டு ஊடகத்துறையினில் பெரும் வளர்ச்சியை கொண்டுவந்தது. ஏற்கனவே வந்து கொண்டிருந்த உதயன் மற்றும் வலம்புரி நாளிதழ்களுடன் புதிய வரவாக யாழ்.தினக்குரலும், நமது ஈழநாடும் இணைந்து கொண்டன. அதே போன்று நிமலராஜன் படுகொலையுடன் தளர்வுற்றிருந்த சுயாதீன ஊடகத்துறையும் கணிசமான வளர்ச்சியை கண்டது. இணைய தளங்கள், தொலைகாட்சி, வானொலிகள் மற்றும் நாளிதழ்கள், சர்வதேச செய்தி ஏஜென்சிகள் என பலவுமே பிரதேச ஊடகவியலாளர்களை நியமித்துக்கொண்டன. உள்ளுர் நாளிதழ்களும் அச்சிடுதலில் ஒப்வ் செட் (ழககளநவ) முறைமை மற்றும் கணனி பயன்பாடு என பலவற்றினில் மேம்பட்டுக்கொண்டன.

ஆனாலும் அரசு‐புலிகளிற்கிடையேயான 2006 ஆகஸ்ட் முதல் மூண்ட மோதல்களின் பின்னர் அந்நிலை தலைகீழாக மாறிப்போனது. இந்நிலையில் அரச படைத்தலைமை, அரசியல் தலைமைகளின் வழிநடத்தல்களின் கீழ் குடாநாட்டு ஊடகத்துறையை இரும்புக்கரங்கொண்டு அடக்க முற்பட்டது.

அதற்கான இரு வெறுவேறான வழிவகைகள் கையளாப்பட்டும் வருகின்றது. ஒன்று ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி அடிபணியவைத்தல், இல்லாவிடின் ஊடகத்துறையிலிருந்து விலகியிருக்கச் செய்தல். அதுவும் முடியாவிடின் நாட்டை விட்டு வெளியேற்றுதல். இறுதித் தெரிவாக படுகொலை செய்தல். எனினும் நிமலராஜன்,ரஜிவர்மன் மற்றும் நிலக்ஷன் ஆகியோர் தொடர்பினில் இறுதித்தெரிவே அவர்களின் முதல் தெரிவாகிவிட்டது. மறுபுறத்தே சக்தி தேவாவின் படுகொலை சூத்திரதாரிகள் யாரென்பது புரியாமலேயுள்ளது.

இரண்டாவது வழிவகையாக ஊடகப்பணியாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் அமைகின்றது. குறிப்பாக ஊடகப்பணியாளர்களென வகைப்படுத்தப்படுபவர்களான நாளிதழ் விநியோகஸ்தர்கள், பக்கவடிவமைப்பு மற்றும் அச்சிடுதலுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அலுவலக முகாமைத்துவத்துடன் தொடர்புபட்டவர்களென அது அமைகின்றது. 1990 ஆம் ஆண்டின் செப்டெம்பர் 27 இல் உதயன் மீதான விமானகுண்டுவீச்சில் உயிரிழந்த விநியோகப்பகுதி அலுவலர் பொ.பத்மநாதன் முதல் 2007 ஆம் ஆண்டின் காணாமல போன யாழ்.தினக்குரல் விநியோகஸ்தர் சித்திராஞ்சன் வரை இக்கதை தொடர்கின்றது.

ஆயினும் அரச தரப்பினர் இரு வழிவகைகளுமே குடாநாட்டினில் வெளிவரும் நாளிதழ்களை தங்களது கைப்பொம்மையாக வைத்திருத்தல் அல்லது அது முடியாவிடின் இழுத்து மூடிவிடுதலென்ற இலக்கை நோக்கமாக கொண்டே அமைந்துள்ளது. தகவல்களுக்கான ஏகபோக உரிமையை அரசும், அரசபடைகளுமே கொண்டிருக்கவேண்டுமென்ற கருத்தைமையமாக கொண்டே செயற்பாடுகள் அமைந்தன.

இதற்கு முன்னதாக கொழும்பு மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு யாழில் இருந்து பணியாற்றிய ஊடகவியலாளர்களை முடக்க முயற்சிகள் ஆரம்பமானது. நிமலராஜன் படுகொலை மற்றும் அதைத்தொடர்ந்து அண்மைக்காலங்களில் தொடர்ந்த அச்சுறுத்தல்கள் சுயாதீன ஊடகத்துறையின் வளர்ச்சியை யாழில் முளையுடனேயே கருகச்செய்துவிட்டது. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் தொழிலை விட்டோ, நாட்டைவிட்டோ வெளியேறியுள்ளனர்.

மறுபுறத்தே யாழில் இருந்து வெளிவரும் உள்ளுர் நாளிதழ்கள் தொடர்பாகவும் அவை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாகவும் ஆராயலாம்.
உதயன்‐சஞ்சீவி

*27 நவம்பர் 1985 ‐ உதயன் நாளிதழ் யாழில் வெளிவர தொடங்கியது.

*25 ஜனவரி 1986 ‐ சகோதர வாரவெளியீடாக சஞ்சீவி வெளிவர தொடங்கியது.

*14 மே 1987 ‐ யாழ்.நகரின் மையப்பகுதியில் இயங்கி அலவலக தொகுதி, படையினரின் எறிகணை தாக்குதல்களையடுத்து நாவலர் வீதி, கைலாயப்பிள்ளையார் கோயிலடிக்கு இடம் பெயர்வு.

*16 ஒக்டோபர் 1987 ‐ யாழ்.நகரம் மற்றும் அதையண்டிய பகுதிகளில் இந்தியப்படைகளுக்கும் புலிகளிடையே மூண்ட மோதல்களையடுத்து உதயன் வெளிவருவது நின்று போனது.

*15 பெப்ரவரி 1988 ‐ உதயன் மீண்டும் வெளிவர ஆரம்பித்தது.

*21 செம்டெம்பர் 1989 ‐ இந்திய படையினருடன் சேர்ந்தியங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ் வினரால் அச்சு இயந்திரங்கள் பறிமுதல்‐உதயன் வெளிவருவது மீண்டும் நின்றுபோனது.

*04 பெப்ரவரி 1990 ‐ உதயன் மீண்டும் வெளிவர ஆரம்பித்தது.

*04 ஆகஸ்ட் 1990 ‐ அரசின் அச்சுதாளுக்கான தடையால் வழமையான அளவிலிருந்து Tablot சைஸ் மாற்றம்.

*26 செம்டெம்பர் 1990 ‐ யாழ்.கோட்டையிலிருந்து உதயன் அலுவலகம் மீது எறிகணை வீச்சு:

*27 செம்டெம்பர் 1990 ‐ விமான குண்டுவீச்சு ஊடகப்பணியாளர் பொ.பத்மநாதன் உயிரிழந்தார். மற்றைய ஊடகப்பணியாளர்களான யோ.ஜெயந்தன், ஏ.சுகிர்தராஜா. வி.கந்தப்பு ஆகியோர் படுகாயம்.

*28 செம்டெம்பர் 1990 ‐ மீண்டும் அடுத்த நான்கு நாட்கள் உதயன் நின்று போனது.

*1992ம் ஆண்டு ‐ காகிதாதி தடையால் மட்டைகளில் நாளிதழ் வெளியிடப்பட்டது.

*31 ஒக்டோபர் 1995 ‐ யாழ்.குடாநட்டில் ஏற்பட்ட பாரிய மக்கள் இடப்பெயர்வையடுத்து உதயன் தென்மராட்சிக்கு இடம் பெயர்ந்து 14 நாட்கள் மீண்டும் உதயன் நின்று போனது.

*14 நவம்பர் 1995 ‐ சாவகச்சேரி, சரசாலையில் உதயன் தற்காலிகமாக நெருக்கடிகள் மத்தியில் உதயன் வெளிவந்தது.

*19 ஏப்ரல் 1996 ‐ தென்மராட்சி நோக்கி இடம்பெற்ற படை நடவடிக்கைகளால் உதயன் நின்று போனது.

10 ஜுன் 1996 ‐ மீண்டும் யாழ்.நகர் திரும்பிய உதயன் 81 நாட்களின் பின்னர் வெளிவரத் தொடங்கியது.

*21 ஆகஸ்ட் 1999 ‐ உதயன் பணிமனை மீது அரச துணைப்படை குண்டு வீச்சு. ஊடகப்பணியாளரொருவர்காயம்.

*06 மே 2000 ‐ ஊரடங்கு உள்ளிட்ட அசாதாரண சூழலால் வாரவெளியீடான சஞ்சீவி நின்று போனது.

*20 மே 2000 ‐ அரசின் செய்தி தணிக்கையை மீறி செயற்பட்டதாக கூறி உதயன் அலுவலகம் பொலிஸாரால் சீலிடப்பட்டது.
04 ஜுலை 2000 ‐ தடைவிலக்கப்பட்டதால் 45 நாட்களின் பின் மீண்டும் உதயன் வெளிவர தொடங்கியது.

*02 மே 2006 ‐ உதயன் அலுவலகத்தினுள் புகுந்து ஆயுததாரிகள் சூடு. ஊடகப்பணியாளர்களான ஜோர்ஜ் சுரேஸ்குமார் மற்றும் ரஞ்சித் இராசநாயகம் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலுமிருவர் படுகாயமடைந்தனர்.நீதிமன்று உத்தரவையடுத்து தொடர்ந்து பொலிஸ்காவல்.

*05 மே 2006 ‐ நல்லூர், இராசவீதியிலுள்ள உதயன் களஞ்சியம் அடையாளந்தெரியாதவர்களால் தீக்கிரை.

*02 ஆகஸ்ட் 2006 ‐ உதயன் விநியோக பணியாளரான எஸ்.பாஸ்கரன் கடமையின் போது புத்தூர் சந்தியில் வைத்து சுட்டுக்கொலை.

*29 ஏப்ரல் 2007 ‐ உதயன் நாளிதழ் அலவலக செய்தியாளர் செல்வராசா ரஜிவர்மன் இராணுவ புலனாய்வாளர்களால் சுட்டுக்கொலை.

*2007 ம் ஆண்டு ‐ உதயன் ஊடகப்பணியாளரான நிர்மல்ராஐ; கடமை முடிந்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டார். பின்னர் இன்று வரை இவர் பற்றித் தகவலில்லை.

யாழ்.தினக்குரல்

*15 மார்ச் 2002 ‐ கொழும்பிலிருந்து வெளிவரும் தேசிய நாளிதழான தினக்குரலின்,யாழ்ப்பாண பதிப்பாக யாழ்.தினக்குரல்
வெளிவரத்தொடங்கியது.

*பெப்ரவரி 2006ம் ஆண்டு ‐ யாழ்.தினக்குரல் விநியோகப்பணிப்பாளரான க.நவரத்தினம் அலுவலக வாசலினில் வைத்து இராணுவ புலனாய்வு பிரிவினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

*27 ஜுன் 2006 ‐ யாழ்.தினக்குரல் மற்றொரு விநியோகப் பணியாளரான குருசுமுத்து மனோஜன்ராஜ் அச்சுவேலி,இராசவீதியில் கடமையின்போது கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்தார்.
*04 நவம்பர் 2007 ‐ மற்றொரு விநியோகப்பணிப்பாளரான அந்தோனிப்பிள்ளை சித்திராஞ்சன் கடமையின் போது கடத்தப்பட்டு காணாமல் போனார்.
நமது ஈழநாடு:

*2004ம் ஆண்டு ‐ யாழ்.நகரின் நாவலர் வீதியில் நாளிதழ் ஆரம்பம்

*2005ம் ஆண்டு ‐பத்திரிகை அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு

*2006ம் ஆண்டு ‐ நிர்வாகப்பணிப்பாளரான ம.சிவமகராசா தெல்லிப்பழையிலுள்ள அவரது வீட்டினில் வைத்து சுட்டுப்படுகொலை.

*12 பெப்ரவரி 2007 ‐ ஊடகப்பணியாளரான க.ரவீந்திரன் கொப்பாயிலுள்ள அவரது வீட்டினில் வைத்து சுட்டுப்படுகொலை.

யாழ்.தினக்குரல்,வலப்புரி மற்றம் நமது ஈழநாடு அலுவலகங்கள் அண்மைக்காலப்பகுதிகளில் பல தடவைகள் அச்சுறுத்தும் பாணியில் சுற்றிவளைப்பு தேடுதல்களிற்குள்ளானது. பணியாளர்களுக்கு வீதிகளில் வைத்துப்பல தடவைக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. சிலர் தாக்கப்பட்டனர். இவற்றின் எதிரொளியாக நமது ஈழநாடு இடையினில் நின்று போனது. ஏற்கனவே இவ்வாறான நெருக்குவாரங்களால் கடந்த 12 வருடங்களுள் ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, காலைக்கதி;ர் மற்றும் சூரியகாந்தி ஆகிய பத்திரிகைகள் நின்று போயின.

2006 ஆகஸ்ட் 11 இன் பின்னரான காலப்பகுதிகளில் அச்சிடல் மூலப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளுக்கு அப்பால் ஏற்பட்ட இவ்வாறான நெருக்குவாரங்கள் முக்கியமானவை. உதயன் நாளிதழின் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் அதன் ஆசிரியர் காணமயில்நாதன் மற்றும் அதன் பிரதம நிருபர் குகநாதன் ஆகிய இருவரும் இரண்டரை வருடங்களுக்கு மேலாக அலுவலகங்களுள் முடங்கியுள்ளனர். செய்தி ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக செ;யதியாளர்களென எட்டிற்கும் அதிகமானோர் பணிகளிலிருந்து விலகினர். சிலர் நாட்டைவிட்டும் வெளியேறினர். பல பிரதேச செய்தியாளர்கள் பணியிலிருந்து விலகிச்கொள்ள மற்றுமொரு பகுதியினர் தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளப்பட்டனர்.
யாழ்.தினக்குரலை பொறுத்தவரையில் அலுவலக செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களென 7 இற்கும் அதிகமானோர் வெளியேறினர். அதன் தற்போதைய ஆசிரியர் தொடர்ச்சியான கொலைமிரட்டல்களின் மத்தியில் பணியாற்றிகின்றார். ஆயினும் பாதுகாப்பற்ற சூழலிலேயே பணி தொடர்கின்றது.

வலம்புரி நாளிதழ்களிலிருந்தும் நான்கிற்கும் அதிகமான அலுவலக செயதியாளர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் வெளியேறினர். எனினும் இந்நாளிதழ்களிலிருந்து வெளியேறிய ஊடக பணியாளர்களது எண்ணிக்கை ஊடகவியலாளர்களை விட பல மடங்கு அதிகமாகும்.

இந்நிலையில் ஒரு புறம் புதிய ஊடகவியலாளர்களை தேடிப்போராடும் இந்நாளிதழ்கள் மறுபுறம் ஊடகப்பணியாளர்களை தேடுவதிலும் போராடவேண்டியிருக்கின்றது. குறிப்பாக விநியோகஸ்தர்கள் படுகொலைகள் மற்றும் கடத்தல்களின் எதிரொலியாக புதியவர்களை பணிக்கமர்த்துவதில் பாரிய நெருக்கடிகள் எதிர்கொள்ளப்படுகின்றது.

இத்தகைய சூழலில் தற்போது படைத்தரப்பு பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்துவரும் சில நடவடிக்கைகள் நாளிதழ்களை முற்றாக மூடிவிடும் முயற்சியேவென சந்தேகம் எழுப்பப்படுகின்றது.

படையினர் மற்றும் பொலிஸாரின் உத்தரவிற்கமைய குடாநாட்டிலிருந்து வெளிவரும் நாளிதழ்கள் அனைத்தும் தம்மிடம் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றன. அவ்விபரங்களில் அவர்களின் வதிவிட தகவல்களும் உள்ளடக்கம். ஏற்கனவே ஊடகப்பணியாளர்கள் தொடர்ச்சியாக வீடுகளில் வைத்துப்படுகொலை செய்யப்படுவதும், அலுவலகங்களிலிருந்து வீடு திரும்புகையில்; கடத்தப்படுகின்றமையும் தொடர்கின்றது. இத்தகைய சூழலில் தமது ஊடகப்பணியாளர்கள் தொடர்பான விபரங்களை வழங்கநாளிதழ் அலுவலகங்கள் முரண்டு பிடிக்கின்றன. எனினும் இது எத்தனை நாட்களுக்கென்பது கேள்விக்குறியே? மறுபுறத்தே கடந்த மாதமும் உதயன் அலுவலகம் மீது கைக்குண்டு வீச்சு மீண்டும் நடந்துள்ளது.

அரச தரப்புகளுக்கு மேலாக, அரச ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்களது நெருக்கு வாரங்களையும் குடாநாட்டு ஊடகவியலாளார்கள் எதிர்கொண்டே வருகின்றனர். இந்திய அமைதிப்படை காலப்பகுதியில் அனைத்து நாளிதழ்களும் இழுத்து மூடப்பட்டு விடுதலை எனும் பெயரில் அப்போது ஆட்சி பீடமேறியிருந்த தரப்பால் நாளிதழ் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. குடாநாட்டு ஊடகவியலாளர்கள் அனைவரும் அந்நாளிதழில் கட்டாயமாக பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதே போன்றே 2006ம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியும் இருந்தது. அரசினில் அங்கம் வகிக்கும் ஆயுத அரசியல் குழுவொன்று நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை தீர்மானிக்கும் சக்தியாக வளர்த்துக்கொண்டது. தமக்கு அரசியல் ரீதியாக சாதகமான வகையில் செய்திகளை அறிக்கையிட ஊடகவியலாளர்களை அது தொடர்ந்தும் நிர்ப்பந்தித்து வருகின்றது. அவ்வாறான உடன்படாத வேளையினில் ஊடகவியலாளர்களையும் ஊடகங்களையும் அது அச்;சுறுத்தி வருகின்றது.

அவ்வாறானதோர் நிலைப்பாடு விடுதலைப்புலிகளது ஆளுமை யாழில் கூடியிருந்த காலப்பகுதிகளிலும் நிலவியே இருந்தது மறுக்கப்படமுடியாதது. எனினும் பரஸ்பர புரிதல்களின் அடிப்படையில் பெரும்பாலும் விட்டுக்கொடுப்புகளாகவும், சிலவேலைகளில் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாகவும் அது இருந்தது.

நாம் இப்போது கட்டுரையின் ஆரம்பித்திற்கே இப்போது வந்து விடலாம். பலாலி உயர் தலைமைகளிலிருந்து ஊடகவியலாளர்களிற்கும், ஊடகங்களிற்கும் விடுக்கப்பட்டு வந்த அதிகாரபூர்வ உத்தரவுகள் தற்போது பரவலாக்கப்பட்டுவிட்டது.

இப்போது அது அவ்வப்பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் பிரிகேட்படை அதிகாரிகளிடமிருந்தும் அவ்வுத்தரவுகள் வர ஆரம்பித்துவிட்டது. சிலவேளைகளில் சந்திகள் தோறும் இருக்கும் மினிமுகாம்கள் வரை இது பரவலாகலாம்.

அன்று வெளிவந்த செய்தியொன்று தொடர்பாக அந்நாளிதழ்களின் ஆசிரியரிலிருந்து அடிமட்ட ஊடகப்பணியாளர் வரை மிரட்டப்படலாம். மிரட்டுபவர்கள் பலாலி உயர்தலைமையிலிருந்து சந்தியில் நிற்கும் சிப்பாய் வரையும் சேர்ந்து நிற்கும் துணைக் குழுக்கள் வரையுமென பரந்துபட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஊடக தர்மத்திற்கு முரணாக செய்திகளுக்கான மூலங்களை காட்டித்தர நிர்ப்பந்திக்கப்படுகின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக நாளிதழ்களது அலுவலக தொலைபேசிகள் முழுமையாக ஒட்டுக்கேட்கப்படுகின்றது. சிலவேளைகளில் உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்டு பின்னர் அதற்கான விசாரணைகள் இடம் பெற்ற சம்பவங்கள் பலவும் உண்டு.

தமிழ் தேசிய விடுதலைப்போராட்டமும், குடாநாட்டு ஊடகத்துறையின் வரலாறும் ஒன்றோடொன்று நேரடி தொடர்புபட்டவை. மாறிமாறி ஆட்சியேறும் அரசுகளும், அவர்களது படைகளும், துணை ஆயுதக்குழுக்களும் நாளிதழ்களை தமது கைகளினுள் வைத்துக்கொள்ள முற்படுகின்றன. குடாநாட்டு மக்களது தகவலறியும் சுதந்திரத்தை முடக்குவதும், தகவல் உரிமைக்கான ஏகபோக உரிமைளை தங்கள் கைகளில் வைத்துக்கொள்ளவும் இவை முற்படுகின்றது.

நாளிதழ் அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் படுகொலைகள், அட்கடத்தல்கள், காணாமற்போகல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் எண்பவை கடந்த (30 வருடங்களாக) மூன்று தசாப்தங்களாகத் தொடர்கின்றன. மறுபுறத்தே காகிதாதிகளுக்கான தட்டுப்பாடும் தொடர்கின்றது. உலகிலேயே ஊடகவியலாளர்கள் அபாயகரமான பகுதியெனவும், அதிலும் முதன்மைப்பட்டியலில் இருப்பதாகவும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு எச்சரித்து வருகின்றது. ஆனாலும் இவை எல்லாவற்றையும் தாண்டி குடாநாட்டின் ஊடகத்துறை தன்னை நிரூபித்தே வருகின்றது. இனிவரும் காலங்களிலும் அது தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தொடர்ந்து போராடும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.