இராணுவ ரகசியங்களை வெளியிடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பாதுகாப்பு அமைச்சு

இராணுவ ரகசியங்களை வெளியிடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் சகல அரச ஊழியர்களும் முக்கியமான அரச இரகசியங்களை பேணிப்பாதுகாக்க வேண்டியது சட்டத் தேவையாகும் என தெரிவித்துள்ளது.

இரகசியங்களை வெளியிடுவதன் மூலம் தேசிய நன்மதிப்பிற்கு பாதிப்பு ஏற்படக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யுத்தத்தில் படைவீரர்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படுவதில்லை என சில ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் முதலைக் கண்ணீர் வடிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இராணுவ இழப்புக்கள் குறித்து அதீதமான புள்ளி விபரங்களை வெளியிடுவதன் மூலம் மக்களதும், படைவீரர்களதும் மனோ திடத்தை வலுவிழக்கச் செய்ய சிலர் முனைப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ ரகசியங்களை வெளியிட்ட பிரித்தானிய கேணல்களையும் அந்நாட்டு அரசாங்கம் தண்டித்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

படைவீரர்களது மனோ வலிமையை இழக்கச் செய்யும் வகையிலான சகல பிரச்சாரங்களும் தேசவிரோதமான செயற்பாடாகவே கருதப்படும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.