> பாதுகாப்பு வலய செய்மதிப் படங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது எவ்வாறு? – விசாரணை நடத்துமாறு ஐ.நா.விடம் அரசு வலியுறுத்தல்

unஇலங்கையின் வடபகுதியில் அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கும் பாதுகாப்பு வலயத்தின் செய்மதிப்படங்கள் ஊடகங்களுக்கு எவ்வாறு கசிந்து சென்றது என்பது தொடர்பாக ஐ.நா.விற்கும் இலங்கைக்கும் இடையில் சர்ச்சை மூண்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி நில்பூனே வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

உணர்வு பூர்வமான இந்த ஆவணம் எவ்வாறு ஊடகங்களுக்கு கசிந்து சென்றது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐ.நா.விடம் கேட்டிருப்பதாக ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கூறியுள்ளார். கொழும்பில் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி நீல்பூனேயை சந்தித்த பின்பே அமைச்சர் சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா.விற்கு அறிவிப்பதாக பூனே பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது முதற்தடவையல்ல என்றும் முன்னரும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்பான ஐ.நா. அறிக்கையானது ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் சமரசிங்க குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதேவேளை, இலங்கையின் மோதல் வலயத்தின் சேதம் பற்றிய செய்மதிப்படங்களை ஐ.நா.நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது. ஆனால் காசா மோதலைப் போன்று அல்லாமல் இந்தப் படங்களை அந்த நிறுவனம் பகிரங்கமாக வெளியிடவில்லை என்று ஐ.நா.விலுள்ள இன்னர்சிற்றிபிரஸ் கூறியுள்ளது.

ஏப்ரல் 19 ஆம் திகதியில் புகைப்பட செய்தி அறிக்கையை பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான ஐ.நா.நிறுவனம் (யூ.என்.ஓ.எஸ்.ஏ.ரி., க்NOகுஅகூ) தயாரித்திருந்தது. இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் செய்மதி கண்டுபிடித்த சேதங்களும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களின் நகர்வும் என்ற தலையங்கத்தில் இந்த செய்தி அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இது காஸா தொடர்பாக 2009 ஜனவரி 19 இல் யூ.என்.ஐ.ரி.ஏ.ஆரின் அறிக்கை போன்றது அல்ல என்றும் இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா. வெளியிடவில்லை எனவும் ஆயினும் அது கசிந்து விட்டதாகவும் ஐ.நா.விலுள்ள இன்னர்சிற்றி பிரஸ் ஏப்ரல் 29 இல் கூறியிருந்தது.

இதேவேளை வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கசிந்திருக்கும் இரகசியமான ஐ.நா.செய்மதிப் படங்கள் இலங்கையில் பொதுமக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது விமானப்படை குண்டு வீச்சை நடத்தியுள்ளதை காட்டுவதாக தென்படுவதாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

யூ.என்.ஓ.எஸ்.ஏ.ரியின் ஏப்ரல் 26 திகதியிடப்பட்ட அறிக்கையில் சிறிய குறுகிய கடற்கரையினதும் தென்னந் தோட்டத்தினதும் (இப்போது 10 ச.கி.மீ.) பிரதிமைகள் விபரமாக வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 12 இல் இதனை அரசாங்கம் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியிருந்தது. அங்கு பொதுமக்கள் செல்லுமாறு கோரப்பட்டிருந்தனர்.

யூனோசற்றின் அறிக்கையானது பெப்ரவரி 5 இற்கும் ஏப்ரல் 19 இற்கும் இடைப்பட்ட கால பிரதி பிம்பங்களை கொண்டதாகும். இந்தப் பாதுகாப்பு வலயத்தின் வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகளுக்குள் கட்டிட அழிவுகள், சேதங்கள் என்பன ஷெல்வீச்சாலும் சாத்தியமான விமானத்தாக்குதல்களாலும் ஏற்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி லண்டன்ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருந்தது.

இலங்கையிலுள்ள ஐ.நா.நிறுவனங்கள் மற்றும் உதவிவழங்கும் அமைப்புகளுக்கு உதவுவதற்காக தயாரிக்கப்பட்டதாகவும் ஆனால் தற்செயலாக அவர்களின் இணையத்தளமொன்றிற்கும் அது இணைக்கப்பட்டு விட்டதாகவும் யூனோசற்றின் நிகழ்ச்சித் தயாரிப்பு முகாமையாளர் பிரான்ஸிஸ்கோ பிசானோ ரைம்ஸுக்கு கூறியுள்ளார். பிரதி பிம்பங்களில் காணப்படும் சில சேதாரங்கள் வான் தாக்குதல்களால் மட்டுமே ஏற்பட்டிருக்கலாம் என்பது தனது ஆய்வாளர்களின் தீர்மானம் என்றும் அவர்கூறியுள்ளார். வான்மார்க்க பலத்தின் மூலம் மட்டுமே இந்த மாதிரியானதொன்றை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பிட்ட அளவுக்கு அப்பாற்பட்ட குழிகள் இவை ஆகாய மார்க்க குண்டுகள் போடப்பட்டதால் ஏற்பட்டவை என்பதை எமது ஆய்வாளர்களுக்கு கிட்டத்தட்ட நிச்சயப்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

எந்தத்தரப்பு இதற்கு பொறுப்பு என்று கூறுவதற்கு அவர் மறுத்துவிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.