அதிகரித்துவரும் இராஜதந்திரப் போர் அரசாங்கத்தைப் பெரிதும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது

colombo-posterவன்னியின் ஒரு மூலைக்குள் நடந்து கொண்டிருக்கின்ற போர் ஒரு புறம் இருக்க, கொழும்பை மையப்படுத்தி நடக்கின்ற இராஜதந்திரப் போர் அரசாங்கத்தைப் பெரிதும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறது.

புலிகளுக்கு எதிரான போர் வன்னியில் ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு “மனிதாபிமானப் போர்’ என்றும்

பொதுமக்களை புலிகளின் பிடியில் இருந்து விடுவிப்பதே தமது நோக்கம் என்றும் கூறியது அரசாங்கம்.

நிலங்களைப் பிடிப்பது படையின?ன் நோக்கமல்ல, சிறிது சிறிதாகப் புலிகளை அழிப்பதே படையினரின் நோக்கம் என்று முதலில் கூறப்பட்டது.

கிளிநொச்சியைப் படையினர் தாண்டியதும், இது பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கின்ற, அழிக்கின்ற போர் என்ற புது இலக்காக மாற்றமடைந்தது.

இப்போது இந்த நோக்கம், புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிப்பதற்கான போர் என்று மாற்றம் கண்டிருக்கிறது. போரை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்காத தரப்பு என்று எதுவுமே இல்லை என்றளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

ஆனாலும் போர் நிறுத்தப்படாது, பிரபாகரனை அழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்கிறது அரசாங்கம்.

பிரபாகரன் என்ற ஒரு மனிதரை அழிப்பதற்காக நடத்தப்படும் யுத்தமாக இருந்தால், அதற்காக அரசாங்கம் கொடுக்கின்ற விலை என்ன, தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அழிவுகள் எவ்வளவு என்று அரசாங்கம் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

போரின் போது கொல்லப்பட்ட உயிர்கள் எத்தனை ஆயிரம்? காயமுற்றவர்கள் எத்தனை ஆயிரம்? காணாமற்போனவர்கள், குடும்பங்களைத் தொலைத்து விட்டு அலைந்து திரிபவர்கள், வாழ வழியின்றி முடங்கிப் போயிருப்போர், அகதி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருப்போர் என்று அவலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

வன்னியின் நகரங்கள் யாவும் அழிக்கப்பட்டு அங்கிருந்த இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வும், வளங்களும் சிதைக்கப்பட்டுள்ள நிலைக்குக் காரணம் என்ன?

புலிகளின் தலைவர் பிரபாகரனைப் அழிப்பதற்காக அரசாங்கம் இதையெல்லாம் செய்கிறதென்றால் இது நியாயமானதொரு நடவடிக்கை தானா என்ற கேள்வி எழும்.

மக்களை மீட்பதற்கான, மனிதாபிமான நோக்கிலான நடவடிக்கை என்றால் அதற்காக செலுத்தப்படும் விலை அதைவிட மோசமானதாகவல்லவா இருக்கிறது. இலங்கை அரசாங்கம் போருக்காகச் செலவிட்ட நிதி எவ்வளவு? இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்க்க அரசாங்கம் தயாராக இல்லை, போரை நிறுத்தவும் தயாராக இல்லை. காரணம் போர் வெற்றி என்ற மாயை அதன் கண்களை மறைத்து நிற்கிறது.

6 சதுர கி.மீ பிரதேசத்துக்குள் தான் இப்போது புலிகளின்? இருப்பு. அதற்குள் தான் பிரபாகரனும் இருக்கிறார் என்கிறது அரசாங்கம்.

பிரபாகரன் இன்ரபோலால் தேடப்படும் ஒருவர். அவரைப் பிடிக்கவோ, அழிக்கவோ மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை சர்வதேசமூகத்தால் இலகுவில் தடுக்க முடியாதென்பதால் பிரபாகரன் அங்கே இருக்கிறார் என்ற பிரசாரத்தை அரசாங்கம் வலுவாக மேற்கொள்கிறது.

சர்வதேச சமூகத்தின் சார்பில் அண்மை நாட்களாகப் போரை நிறுத்துமாறு கோரும் வற்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இதைச் சமாளிப்பது அரசாங்கத்துக்குப் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

கடந்த வாரத்தில் பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் வந்தார், பி?ட்டன் மற்றும் பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர்கள் வந்த னர். ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாசி வந்தார். இப்படிப் பலர் வந்து போயினர்.

சுவீடனின் வெளியுறவு அமைச்சரும் இவர்களுடன் கொழும்பு வரவிருந்த போதும் அதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்து விட்டது.

அவருக்கு விசா வழங்க மறுத்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், விசா மறுக்கப்படவில்லை. வேறொரு நாளில் அவர் வருவார் என்கிறது அரசாங்கம். இதைக் கண்டித்து கொழும்பிலிருந்து தனது தூதுவரை மீளஅழைத்துள்ளது சுவீடன்.

இலங்கை அரசாங்கத்தின் செயல்களுக்காக கடும் விளைவுகள் ஏற்படும் என்று ஐரோப்பிய யூனியன் எச்சரித்திருக்கிறது. ஆக, இலங்கை அரசாங்கம் இப்போது சர்வதேசத்தின் சுழற்புயல்களில் சிக்கிப் போயிருக்கிறது.

யாருக்கு எதைக் கூறுவது? எப்படிக் கூறுவதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாக இருக்கிறது. என்ன நடந்தாலும் போரை நிறுத்துவதில்லை என்பதே அது.

இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தவும் இறுக்கிப் பிடிக்கவும் தான் இலங்கை அரசாங்கம் புலிகளைக் காப்பாற்ற சர்வதேசம் முற்படுவதாக ஒரு பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.

புலிகளை, பிரபாகரனைப் பாதுகாப்பாக வெளியேற்றவே சர்வதேசம் போர்நிறுத்தம் செய்யக் கோருவதாக கூறுகிறது அரசாங்கம்.

இதற்கு சர்வதேச சமூகம், தாம் பிரபாகரனையோ புலிகளையோ பாதுகாக்க முற்படவில்லை என்றும் பொதுமக்களுக்காகவே போரைநிறுத்தக் கோருவதாகக் கூறினாலும் அரசாங்கம் தனது பிடிவாதப் போக்கைக் கைவிடவில்லை.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வெற்றியை நெருங்கியுள்ள நிலையில் போரை நிறுத்திவிட்டால் சிங்கள மக்களின் கோபத்துக்குள்ளாக நேரிடும் என்ற அச்சம் இருக்கிறது.

புலிகள் இயக்கத்தை இந்தத் தருணத்தில் அழிக்கத் தவறினால் இப்படியொரு சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்காது என்று நினைக்கிறது.

அதைவிட முக்கியமானது புலிகளை அழித்து விட்டால் ஈழக் கோட்பாடே முற்றாகச் சிதைந்து விடும் என்று கருதுகிறது. இங்கே தான் அரசாங்கம் தவறுக்கு மேல் தவறை இழைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்மக்களுக்கு அரசாங்கம் பொருத்தமானதொரு அரசியல் தீர்வை வழங்காத வரையில் ஈழக் கோட்பாடு ஒரு போதும் அழியமாட்டாது.

புலிகள் தமிழீழக் கோட்பாட்டை முன்னிறுத்திப் போரை நடத்தினரே தவிர, புலிகள்தான் தமிழீழக் கோட்பாட்டின் அடிப்படை என்ற கருத்து தவறானது.

புலிகள் அழிக்கப்பட்டு விட்டாலும்கூட தமிழீழக் கோட்பாடு என்பதை இலகுவில் அழிக்க முடியாது. காரணம் ஈழக் கோட்பாடு இன்று சர்வதேச மயப்பட்டு விட்டது.

ஜெயலலிதா, தனி ஈழத்தை அமைத்தே தீருவேன் என்று கூறுகிறார். தேர்தல் பிரசாரத்துக்காக கூறப்பட்டிருந்தாலும்கூட ஈழக் கோட்பாடு மீதான போராட்டம் இன்னொரு புதிய வடிவத்தைப் பெறப் போகிறது என்பதற்கான அடையாளமே இது.

இதற்கு முன்னர் எந்தவொரு அரசியல் தலைவரும் தான் ஈழத்தை அமைத்துக் கொடுப்பேன் என்று கூறியதில்லை. புலிகளை அழிப்பது போன்று இலங்கை அரசாங்கத்தால் ஜெயலலிதாவையோ அ.தி.மு.க.வையோ அழித்து விட முடியாது. புலிகளை அழிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம், தமிழீழக் கோட்பாட்டை அழிக்கலாம் என்ற கனவுடன் அரசாங்கம் இருக்கிறது. அதற்காகவே சர்வதேசத்தையும் அதன் கருத்துக்களையும் புறக்கணித்துவிட்டு போரை நடத்துகிறது.

இந்தப் போரைத் தொடர்ந்து எவ்வளவு காலத்துக்கு அரசாங்கம் நடத்தப் போகிறது? எவ்வளவு காலத்துக்கு சர்வதேசத்தை பகைத்து நிற்கப் போகிறது? பொருளாதார நெருக்கடியைக் கொடுத்து இலங்கை அரசாங்கத்தைப் பணிய வைக்கும் முயற்சியில் அடுத்த கட்டமாக சர்வதேசம் இறங்கலாம்.

இவையெல்லாம் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி மேல் நெருக்கடியைக் கொடுக்கப் போகிற விடயங்களாகவே இருக்கும்.

சர்வதேசத்தின் கருத்துகளுக்கு மதிப்பளித்து போர்நிறுத்தத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த எவ்வளவுக்கு எவ்வளவு தயக்கம் காட்டுகிறதோ, அந்தளவுக்கு நெருக்கடிகள் இலங்கையைச் சூழ்ந்து கொள்ளும் என்பது உறுதியாகத் தெரிகிறது.

-சத்திரியன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.