தமிழ் கட்சி பிரதிநிதிகளை ஸ்ரீலங்கா மீண்டும் அழைத்துபேசுவதற்கு முடிவு கூட்டமைப்பிற்கும் அழைப்பு விட தீர்மானம்

வடக்கின் தற்போதைய மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவுசெய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இந்த சந்திப்பு பெரும்பாலும் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறலாம் என்றும் இச் சந்திப்பிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்க விருப்பதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

எனினும் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து தமக்கு எவ்விதமான அழைப்பிதழ்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அவ்வாறானதொரு அழைப்பிதழ் கிடைக்குமாயின் அதுதொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாடி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

உள்ளகமாக இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவிருப்பதாகவும் இந்த சந்திப்பின் போது நலன்புரி நிலையங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.