சிறுமி தினுஷ்காவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் சுட்டுக் கொலை

thinushikaமட்டக்களப்பில் இனந்தெரியாத நபர்களினால் கடத்திக் கொலை செய்யப்பட்ட சிறுமி தினுஷ்காவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் இன்று காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று நண்பகல் வேளையில் ஏறாவூர் ஐயங்கேணி பகுதியில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதனைத் தொடர்ந்து இவர்கள் காவற்துறை தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 12.45 மணியளவில் மாணவியின் பாடசாலை பையை காட்டுவதற்காக குறித்த சந்தேக நபர்கள் மாணவி கொலைசெய்யப்பட்ட இடமான மட்டக்களப்பு முஸ்லிம் மையவாடிக்கருகில் காவற்துறையினரை அழைத்துச் சென்றுள்ளனர்.
 
அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற சந்தேக நபர்கள் மாணவியின் பாடசாலை பையை காட்டுவதாக இறங்கிச் சென்று குறித்த பையினுள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவற்துறை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவுதம், அதனைத் தொடர்ந்து காவற்துறையினர் அவர்கள் மீது மேற்கொண்ட  துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேக நபர்கள் கொல்லப்பட்டதாகவும் மட்டக்களப்பு காவற்துறையினர் தெரிவித்தனர்.
 
துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்படட்வர்கள் 20 வயதுடைய எட்வேட் ஜூலியன், 24 வயதுடைய மகிந்தன் மயூரன் மற்றும்
19 வயதுடைய சோஸ்கந்தன் தனுசன் என அடையாளங காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு காவற்துறையினர் தெரிவித்தனர்.
 
அத்துடன் குறித்த பகுதியில் இருந்து ஆறு கைக்குண்டுகளும், இரண்டு ரீ‐56 ரக துப்பாக்கிகளும், 2 துப்பாக்கிகளின் மகசீன்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர்; மேலும் தெரிவித்தனர்.
 
மட்டக்களப்பு மாவட்ட தலைமை காவற்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதேவேளை குறித்த சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யும்படி வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டு வந்து ஹர்த்தால் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மட்டக்களப்பு நகரில் பாடசாலையை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், வங்கிகள், அரச செயலகங்கள் என்பன வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை கிழக்கில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி வர்ஷாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் காவற்துறையினரால்;சுட்டுக் கொல்லப்பட்டதுடன், ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில் மற்றுமொரு சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்கள் தற்பொழுது காவற்துறையினரால்; சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது அப்பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.