புலிகள் பங்குபெறாத தமிழ் பிரதிநிதித்துவத்தை இலங்கையில் ஏற்படுத்த இந்திய மற்றும் ஸ்ரீலங்கா அரசுகள் கூட்டுச் சதி

mahinda2020sonia201இலங்கையின் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கூட்டமைப்பை உருவாக்கி விடுதலைப் புலிகள் பங்குபெறாத தமிழ் பிரதிநிதித்துவத்தை இலங்கையில் ஏற்படுத்த இந்திய மற்றும் ஸ்ரீலங்கா அரசுகள் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடு ஒன்றில் இந்தியப் புலனாய்வுத் துறையின் செயல்பாட்டு வலையமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்த ஒருவர் இந்த நடவடிக்கைக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டு தற்போது கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இவர் பல பலவருடங்களுக்கு முன்னர் இலங்கையில் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்தவர் என்றும் எனினும் நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளை அடுத்து தனத குடும்பத்துடன் மேற்குலக நாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் கோரி அங்கு இந்திய புலனாய்வு வலையமைப்பின் முக்கியஸ்தராக செயல்பட்டு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

நேற்று கொழும்பில் இந்தியாவின் திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டமை மிக முக்கிய அம்சமாகும்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்தின் ஆகியோர், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப்பின் நாபா அணி தலைவர் சிறீதரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்தன் ஆகியோர் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் கலந்து கொண்ட சில முக்கிய பிரமுகர்கள்.

இவர்கள் தவிரவும் முன்னாள் தமிழ் குழுக்களின் செயற்பாட்டாளர்களும் தற்போது அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் சிலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவின் புலனாய்வு பிரிவின் நிகழ்சி நிரலுக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் ஆராய்ப்பட்ட விடயங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை வெளியிடுவதில்லை என இதில் கலந்து கொண்டவர்கள் இணங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த திட்டம் குறித்து ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இந்தியாவில் வைத்து தெளிவுபடுத்தப்பட்டு அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலும் இந்திய தரப்பினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு கிழக்கு இணைந்த ஒரு அலகு என்ற இந்திய இலங்கை ஒப்பந்தம் கூறும் விடயத்தை ஏற்க முடியாது என ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்தியாவிற்கு திட்டவட்டமாக அறிவித்தமையை அடுத்து வடக்கு மற்றும் கிழக்கிற்கான புலிகளுக்கு மாற்றான தனியான அரசியல் தலைமைத்துவங்களை  ஏற்படுத்த இந்தியா இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கிழக்கில் மாகாண அதிகாரங்கள் பிள்ளையானிடமும் மத்திய அமைச்சரவை அதிகாரம் கருணாவிற்கும் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் கிழக்கு மாகணாத்தின் அரசியல் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பிள்ளையான் மற்றும் கருணா ஆகிய இருவரும் அரசாங்கத்தடன் இணைந்துள்ள போதிலும் அவர்களுக்கிடையிலான முரண்பாடுகளை திட்டமிட்டு உருவாக்கியதன் மூலம் கிழக்கின் தமிழர் அரசியலும் வழங்கப்படுவதற்கு மேலாக எதனையும்  கேட்டு பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மறுபுறம் வடக்கில் தமிழர்களின் மிதவாத அரசியல் தலைமைகள் கிழக்கை விடவும் அதிகமாக உள்ளதுடன் இந்திய மற்றும் ஸ்ரீலங்கா  அரசாங்கங்களுக்கு வாய்பாக அவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஏற்கனவே தோன்றி பெருத்து கிடக்கின்றன.

கிழக்கில் பிள்ளையான் கருணா போல வடக்கில் டக்களசும் ஆனந்தசங்கரியின் கூட்டணியும் முட்டிமோதி கொள்ளவது அரசாங்கத்திற்கு சாதகமானது.

மறுபுறம் தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்குகள் மூலம் பாராளுமன்ற அங்கத்துவம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை அச்சுறுத்தி உள்வாங்கியதன் மூலம் அவர்களும் பல்லிழந்த பாம்புகளாக்கப்பட்டுளனர்.

ஆக மொத்தம் எதை கொடுத்தாலும் அதனை மனமுவந்து அரசின் தாழ்பணிந்து ஏற்று தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தாங்கள் அடைந்துவிட்டதாக உலகத்திற்கு அடித்து சத்தியம் பண்ண இரு கூட்டங்கள் தயாராகிவிட்டன.

வன்னியில் நடைபெற்று வரும் படை நடவடிக்கை முற்று பெறுவதாக அரசாங்கம் அறிவிக்கும் ஒரு நாளில் ( அந்த நாள் எது என்று யாருக்கும் இதுவரை தெரியாமல் தான் இருக்கின்றது) இந்த கூட்டணி குறித்த தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும்.

எனினும் அரசாங்கம் இன்றும் ஒரு சில நாட்களில் வன்னி படை நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கு தயாராகிவருவதாகவும் அதனை அடுத்து உடனடியாக இந்தியாவால் தயாரிக்கப்பட்ட மகிந்த சிந்தனையின் கீழ் அமையக் கூடிய தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.