பாடசாலை ஆசிரியர் வவுணதீவில் சுட்டுக்கொலை: மட்டக்களப்பில் தொடரும் கொலைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப் பகுதியில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் இன்று வீதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மீண்டும் பதற்ற நிலை உருவாகியிருக்கின்றது.

பாடசாலை மாணவி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன்னதாகவே இதில் சம்பந்தப்பட்தாகத் தெரிவிக்கப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இச்சம்பவங்களின் அதிர்ச்சியில் இருந்து மட்டக்களப்பு கல்விச் சமூகம் மீள்வதற்கு முன்னதாகவே இன்று காலை போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாகவுள்ள வேளையில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் வீதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை கொல்லப்பட்ட ஆசிரியர் ஈச்சந்தீவை சொந்த இடமாகக் கொண்ட 32 வயதான பாலசிங்கம் ரவீந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியரான இவர், பாவற்கொடிச்சேனைப் பாடசாலையில் தமிழ் மற்றும் சமய பாடங்களை கற்பித்து வந்தார்.

மட்டக்களப்பு ஊறணியில் வசித்து வந்த இவர், இன்று காலை 7:30 நிமிடத்துக்கு பாடசாலைக்கு செல்லும் போது எதிரில் தலைக்கவசத்துடன் உந்துருளியில் வந்தவரால் கன்னன்குடாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டினை நடத்தியவர் வவுணதீவு முகாமை நோக்கிச் சென்றதை அப்பகுதி மக்கள் நேரில் கண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.