“போர்ப் பகுதிகளுக்குச் செல்ல ஐ.நா.வை அனுமதிக்க வேண்டும்”: மகிந்தவிடம் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தல்

general-ban-ki-moon“இடம்பெயர்ந்தவர்களுடைய முகாம்களுக்கு மட்டுமன்றி, போர்ப் பகுதிகளுக்கும் கூட ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணியாளர்களின் குழு சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்” என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன், நேற்று செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிய ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன், நெருக்கடிக்குப் பின்னரான அனுசரணையை வழங்குவதற்கும் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றார்.

ஐ.நா.வில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய பான் கீ மூன், “மனிதாபிமான அடிப்படையிலான போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொண்டேன். அதன் மூலமாகவே அவசரமாகத் தேவையாகவிருக்கும் உதவிகள், குறிப்பாக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அப்பகுதிக்கு அனுப்பிவைக்க முடியும்” எனவும் தெரிவித்தார்.

“இவ்வாறு போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலமாகவே ஐ.நா. சபையால் அந்தப் பகுதிக்குச் சென்று நிலைமைகளை சரியான முறையில் மதிப்பிடக்கூடியதாக இருக்கும்” எனவும் குறிப்பிட்ட ஐ.நா. செயலாளர் நாயகம், “அதன் மூலமாகவே உயிர்களைக் காப்பாற்ற முடியும்” எனவும் சுட்டிக்காட்டினார்.

அங்கு பான் கீ மூன் மேலும் முக்கியமாக தெரிவித்தாவது:

“பொதுமக்கள் ஆபத்தான நிலையில் உள்ள அந்தப் பகுதி மீது ஆட்டிலறி மற்றும் கனரக ஆயுதங்களின் பாவனையைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொண்டேன். அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்குமாறும், கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் விடுதலைப் புலிகள் அமைப்பை நான் கேட்டுக்கொண்டேன்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்தப் பிரச்சினைக்கு ஒரு சமாதான தீர்வைக் கொண்டுவர வேண்டிய அவசரத் தேவை இரண்டு தரப்பினருக்கும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இனிமேலும் இரத்தம் சிந்தாமல் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிபந்தனைகள் என்ன என்பதனை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதும், அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் மதிக்கப்படுவதும் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய விடயங்கள் என்பதை நான் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அனைத்துலக சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா விவகாரம் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் விடயமாகத் தொடர்ந்தும் வைக்கப்பட்டிருக்கும் என்பது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.

இன்று (நேற்று) அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் மிகவும் நீண்ட தொலைபேசி உரையாடல் ஒன்றை நான் மேற்கொண்டேன். தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாக இதில் ஆராயப்பட்டன. போர்ப் பகுதிகளில் தற்போதும் உள்ள மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய மனிதாபிமான விடயங்களே இதில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. அந்தப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற முடியாதிருப்பதாதல் கவலைக்குரிய ஒரு நிலைமைதான் தற்போது அங்கு காணப்படுகின்றது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. அமைப்புக்கள் மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைப்பதற்கு முயன்றாலும், அவர்களுக்கு அது போதுமானதாக இல்லை.

தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐ.நா. பணியாளர்கள் தொடர்பாகவும் சிறிலங்கா அரச தலைவருடன் பேசினேன். இது தொடர்பில் எம்மால் வழங்கப்பட்ட பெயர்ப் பட்டியலில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதுதான் அவர் எனக்குத் தெரிவித்தது. இவை எமக்கு உற்சாகமளிப்பதாக உள்ளது.

இடம்பெயர்ந்தவர்களுடைய முகாம்களுக்கு மட்டுமன்றி, போர்ப் பகுதிகளுக்கும் கூட ஐ.நா. மனிதாபிமானப் பணியாளர்களின் குழு சென்றுவருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என நான் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேன்.” எனவும் பான் கீ மூன் தெரிவித்தார்.

இதேவேளையில் வன்னியில் உள்ள இடம்பெயர்ந்தவர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்ர்கள் என்பதை நேரில் வந்து பார்வையிடுமறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு இந்தத் தொலைபேசி உரையாடலின் போது அழைப்பு விடுத்தாக கொழும்பில் அரச தலைவர் செயலக வட்டாரங்கள் இன்று காலை தெரிவித்தன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.