எங்களின் அச்சம் நியாயமானது தானே?

srilanka-warஒரு இனத்திற்கு எதிராகப் பெறப்படும் இராணுவ வெற்றிகள் எவ்வளவு தூரம் சமூகத்தினை வன்மையடைய செய்து யதார்த்தங்களை மறைத்து விடுகின்றன என்பதற்கு தற்போதைய கொழும்பு நிலவரங்களே சிறந்த சான்றாக இருக்கின்றன.

நாட்டின் ஒரு பாகத்தில் மூர்க்கமாக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஓர் இனத்தின் மனித உரிமைகள் மிதித்து துவம்சம் செய்யப்படும் நிலையில் தலைநகர் அமைதியின் சின்னமாக விளங்குகின்றது. லிப்டன் சுற்றுவட்டம் வெறிச்சோடிக்கிடக்கின்றது. கோட்டை புகையிரத நிலையம் அமைதியாக வழமை போல் இயங்குகின்றது. அங்கு பதாதைகள் இல்லை. கோஷமிட எவரும் இல்லை. யுத்த வெற்றிகள் குறிப்பாக மனிதாபிமானம், ஈவிரக்கம், நடுநிலைமை அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்து விட்டன என்பதற்கு இந்த இரண்டு இடங்களே சான்றாகி நிற்கின்றன.

தேசியத் தொலைக்காட்சிகளில் இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கைகளின் படத்தொகுப்புகள், சிங்கள வானொலி சேவைகளில் முப்படையினருக்கான பாடல் சேவைகள், அவர்களின் சேவை நலன் பாராட்டவும், யுத்தத்தின் வெற்றிக் களிப்பினை எய்தவும் என நேயர்கள் வாழ்த்துக் கூறும் நிகழ்ச்சிகள் என்று சிங்கள சமூகம் யுத்தத்திற்குள் திளைத்து விட்டது. விகாரைகளில் அவர்கள் ஆசி வேண்டி விசேட பூஜைகள் நடக்கின்றன. ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் இறைவன் ஆசி கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகள் இந்த வானொலிச் சேவைகளில் உரையாடி கருத்துத் தெரிவிக்கும் நேயர்களினால் முன்வைக்கப்படுகின்றன. அதுவும் இந்த நேயர்கள் படையினரின் உறவினர்களாகவும், முப்படையினரைச் சேர்ந்த உறுப்பினர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாய் நாட்டினை பயங்கரவாதிகளிடம் காப்பாற்ற உயிர் துறப்பது பெரும் செயல், அவ்வாறானவர்களை நாம் பெற்றெடுத்ததற்கு பெருமை கொள்கின்றோம் என்கின்றனர் சிங்கள அன்னையர்கள். எனது கணவர் நாட்டைக் காப்பதற்காகத் தானே உயிர் துறந்தார். அதுவே எனக்கு பெருமை என்கின்றார்கள் வீரமுடன் சிங்களப் பெண்கள்.

பிரபாகரனைப் பிடித்து சுட்;டுக் கொல்ல வேண்டும். பின்னர் அவன் தலையை துண்டித்து அதனை கொழும்புக்கு எடுத்து வர வேண்டும். அந்த தலையை நாங்கள் செருப்பினால் அடிக்க வேண்டும். அதற்கு முப்படையினருக்கும் இறைவன் தான் ஆசியளிக்க வேண்டும் என்று சிங்கள நேயர் ஒருவர் இந்த வானொலிச் சேவையில் தனது ஆசையை வெளிப்படுத்தினார். வெளிநாட்டில் வசிக்கும் சிங்கள பெண்மணி ஒருவர் நிகழ்ச்சியில் உரையாடி தனது கருத்துக்களைத் தெரிவிக்கும் போது, வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தமிழர் போராட்டங்களை மிக மோசமாகக் கடிந்து கொண்டார். இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகின்றதாம். கிளிநொச்சிக்கு ஜனாதிபதி சென்று வந்தது குறித்து கவலை கொண்ட அவர், ஜனாதிபதியின் அசாத்திய துணிச்சலைப் பாராட்டினாலும் அச்சமின்றி அவர் அங்கு சென்று வந்தது தமக்கு பெரும் அச்சத்தை ஊட்டி அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியதாகவும், அங்கு அவருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் இலங்கையின் நிலைமை என்னவாகும் என்று கவலைக் கொண்ட அப்பெண்மணி, ஜனாதிபதிக்காக தான் காலையும் மாலையும் விளக்கு வைத்து கடவுளைப் பிரார்த்திப்பதாகக் கூறினார்.

இவையெலாம் எமக்கு உறுதிப்படுத்தும் விடயங்கள் என்ன? சிங்கள சமூகம் என்றுமே திருந்தப்போவதில்லை என்பதே. ஓரினம் இந்த யுத்த வெற்றிகளினால் களிப்புற்று யதார்த்தங்களை மறந்து எதிர்கால விளைவுகளை சற்றேனும் சிந்திக்காமல் ஓர் மாயைக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது என்பதனை எண்ணும் போது அவர்கள் மீது கழிவிரக்கம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. சிங்கள ஊடகங்கள் கூறும் விடயங்களை அப்பட்டமாக இந்த மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அதற்கு அப்பாலான சிந்தனைத் தெளிவினைப் பெற இவர்கள் யாருமே விரும்பவில்லை என்பதே துரதிருஷ்டம்.

இருப்பினும் இத்தகையை மோசமான சூழ்நிலைகள் மத்தியில் அமைதியாக நடப்பதைப் பார்த்துக் கொண்டு சிங்களத்தின் மாயத்தோற்றுவாரங்களை செவிமடுத்துக் கொண்டு எதிர்ப்பேச்சு பேச முடியாமல் வாயை இழுத்து மூடிக் கொண்டு இருக்கும் கொழும்பு வாழ் தமிழர்களாகிய நமக்கு நாமே பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்ள வேண்டும். வேறு என்ன செய்ய? வீதியில் சிங்கள வியாபாரியிடம் பேரம் பேசிப் பாருங்கள். கடைக்கு சென்று என்ன விலை இவ்வளவு உயர்வாக இருக்கின்றதே என்று கேட்டுப்பாருங்கள். அப்படித்தான் தர முடியும் வாங்கினால் வாங்குங்கள். இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் போய் வாங்குங்கள் என்று பதில் வருகின்றது. பொது இடங்களில் இராணுவ வெற்றிகளை சிலாகிக்கின்றனர். அதுவும் சத்தமாக. அருகில் இருப்பது தமிழர் என்று உறுதியாகி விட்டால், அந்த சத்தம் வீராவேசமாக மாறி விடுகின்றது.

முன்பு சிங்களவரிடம் எதையாவது கேட்டுத் தொலைத்தால் வன்னிக்குப் போய் கேள் என்பார்கள். இப்பொழுதோ வன்னியும் இல்லாத நிலையில் போய் ஜெயலலிதாவிடம் கேள் என்கின்றார்கள்.

நிலைமை எமக்கு எதிராகத் திரும்பவும் வாய்ப்பிருக்கின்றது. பயங்கரவாதிகளை அழித்து விட்டால் எல்லாமே முடிந்து விட்டது. சிங்களவர்களைப் பொறுத்தவரையில் அதன் பின்னர் அவர்கள் போடும் தாளத்திற்கு நாம் ஆட வேண்டுமே. மே அப்பே ரட்ட, மே அப்பே ரட்ட என்று இப்பொழுதே கூவத் தொடங்கி விட்ட அவர்கள், எங்கள் நாட்டில் உங்களுக்கு என்ன வேலை என்று தலைநகரில் இருக்கும் எங்களை ஓட ஓட விரட்டினால் என்ன செய்வது? கொழும்புத் தமிழர்கள் மனதில் இன்று எழும் கேள்வி இதுவே. அதுவும் நடந்து முடிந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழர்கள் ஓட்டுப் போட்ட சதவீதம் குறைவு என்று சிங்களவர்கள் குறைப்பட்டுக் கொண்டனர்.

சிங்களவர்களின் வெசக் தினங்களில் தமிழ் கோயில் திருவிழாக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர்கள் ஓடர் போட்டுவிட்டார்கள். இறக்குவாணை கோயில் விவகாரம் குறித்து இப்பொழுது அனைவராலும் பேசப்படுகின்றது. இந்த நிலை மற்ற விடயங்களிலும் தொடராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

நியாயம் பேச தற்போது கொழும்பில் எவரும் இல்லை. எல்லோரும் அமைதி என்ற ஆடையை விருப்புடன் அணிந்து கொண்டு வலம் வருகின்றனர். அமைதி, சமாதானம், சம உரிமை என்பனவற்றை தாரக மந்திரமாக்கி பணியாற்றி சிங்களவர்கள் பலர் என்னவானார்கள்? நாட்டில் இல்லை என்ற பதில் கிடைக்கும். தேடிப்பார்த்தால் ஒன்று யுத்தக் கொடூரங்களை தமிழ் இன அழிப்பினை நியாயப்படுத்துகின்றவர்களாக அவர்கள் மாறி விட்டிருப்பார்கள். அல்லது இப்பொழுது கருத்துக்கள் எதனையும் கூற முடியாது என்பர். அது தான் கோட்டைப்புகையிரத நிலையமும், லிப்டன் சுற்று வட்டமும் ஈயாடிக் கொண்டிருக்கின்றதே. இனியில்லாத வகையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வுகளை முன்வைக்குமாறு கோஷமிட்ட பலர் இப்பொழுது தனது அரச சார்பற்ற நிறுவனப் பணிகளை எப்படி வடக்கு வசந்தத்தில் விஸ்தரிப்பது என்று கூட்டம் கூட்டி ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். எதையாவது பேசி ஏன் உயிரை வீணே பறி கொடுப்பான் என்று அமைதியாகவே இருக்கும் நிலையில் பலர்.

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் எழுச்சி நிலை, தமிழ் நாட்டு அரசியல், தமிழ் நாட்டு மக்களின் இலங்கை அரச விரோதப் போக்குகள், பல்வேறு நாடுகளின் இராஜதந்திர அழுத்தங்கள், இலங்கை அரசின் வெளிநாட்டுக் கொள்கைகளின் பலவீனங்கள் என்பன குறித்து சிந்தித்து கவலை கொள்ளும் சிங்களவர்களும் இல்லாமல் இல்லை. அவர்களின் கவலை இந்த காரணிகள் அனைத்தும் ஈழம் தானாக அமைய வழி சமைக்கப் போகின்றதே என்பதே.

இப்பொழுது எஞ்சியிருப்பது ஏழு கி.மீற்றர்களாம். அப்படியாயின் சிங்கள மக்களின் ஆசியுடனும், கடவுள் பிரார்த்தனையுடனும் அந்த கி.மீற்றர்களும் கிடைத்து விடுகின்றது என்று கொண்டால், கொழும்பர்களாகிய நாம் மன்னிக்கவும் கொழும்பு வாழ் தமிழ் மக்களாகிய நாம் நமது மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு எதற்கும் தயாரக வேண்டியது தான். வேறு வழியில்லை. சொல்லுங்கள் எங்கள் அச்சம் நியாயமானது தானே!

GTN ற்காக ரட்ணா

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.