தமிழகத்து உறவுகளுக்கு ஒரு பாசமடல்

tamilnadu-electionஎங்கள் அன்புக்கும் பாசத்துக்குமுரிய தமிழகத்து தொப்புள்கொடி உறவுகளே!

அரசியல் வெறும் சாக்கடையென்றும் நாடகமேடையென்றும் எண்ணியிருந்த நாங்கள் இன்று அதே அரசியலுக்காக, உங்கள் தேர்தலுக்காக, எங்கள் வாழ்வுக்காக, எங்கள் தேசத்தின் விடியலுக்காக உங்களிடம் சுருக்கமாகச் சில விடையங்களைக் கூற விளைகின்றோம்.

எங்கள் இலட்சியமான தமிழீழம் மலர தங்களாலான சகல முயற்சிகளையும் எடுப்பதாக அ.தி.மு.க கூறுகின்றது. அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை வெறும் வாக்குகளாப் பாராமல் ஒரு புதிய சுதந்திர தேசத்தின் சுவர்ற்கற்களாக நினைத்து அள்ளிவழங்கவேண்டும் என்று அன்புடன் வேண்டுகின்றோம்.

இது வெறும் வார்த்தை ஜாலம் என்றும் தேர்தல் நேரங்களில் நடைபெறும் ஒரு சாதாரண விடயம்தானே என்றும் உங்களில் பலர் பேசிக்கொள்வது எங்களுக்குப் புரிகிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை நல்லது நடக்கும் என்றும் சொன்னதைச் செய்வார்கள் என்றும் நம்புவோமாக.

கடந்த கால கசப்பான தேர்தல் அனுபவங்கள் உங்களைச் சற்று யோசிக்கவே செய்யும். உங்களால் மட்டுமல்ல எங்களாலும் சகித்துக்கொள்ள முடியாதவையாயும் இருந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் தமிழீழத் தேசத்துக்கு உங்கள் வாக்குகள் அங்கீகாரம் ஆகட்டும். இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் பயன்படுத்தாவிட்டால் மாபெரும் வரலாற்றுத்தவறை செய்தவராவீர்கள். அது மட்டுமல்ல முக்கியமாக இதில் அ.தி.மு.க தோற்றுவிட்டால் இன்று எம்மைக் கொன்று குவித்து எமது இனத்தையே அழித்தொழிக்கும் இரத்தக்காடேறிகளுக்கு அதைவிட குதூகலமும் உற்சாகமும் இருக்கமுடியாது.
தமிழகமும் எம்மைக் கைவிட்டதாகவும் எங்களுக்கு யாரும் இல்லை என்றும் உற்சாகத்துடன் கொலைவெறிக் கூத்தாடுவார்கள். ஆகவே கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து சுயநலம்பாராது எங்களுக்காக அ.தி.மு.க வுக்கு வாக்களியுங்கள்.

உங்கள் உடன்பிறப்புகளுக்காக இம்முறை உங்கள் வாக்குகளைப் பயன்படுத்துங்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதும் விடுவதும் அவர்களைப் பொறுத்தது. தமிழர்களை ஏமாற்றி அவர்களின் பிணங்களின் மேல் நடந்து அரசியல் நடாத்த யாராவது முற்பட்டால் அவர்களை அவர்கள் மனச்சாட்சியே கொன்றொழித்துவிடும். எம் மண்ணில் இந்தநிமிடம் வரை சரிந்துகொண்டிருக்கும் ஆயிரமாரிம் தமிழர்களின் ஆத்மாக்களும் அவர்களைச் சும்மாவிடாது. ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை அ.தி.மு.க வுக்கு வழங்கி எங்கள் கனவை நனவாக்க உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

அன்புடன்
ஓர் ஈழத்தமிழன்
James Raj (Stavanger, Norway)

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.