செஞ்சிலுவைச் சங்க கப்பல் செல்ல முடியாதவாறு படையினர் எறிகணைத் தாக்குதல்

redcross-shipஅனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் இன்று (வியாழக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதல் காரணமாக வன்னி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை இந்தக் கப்பல் வன்னியில் ஒரு இலட்சத்து 65 ஆயித்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ள பிரதேசத்தின் கரைக்கு செல்ல முற்பட்டபோது சிறீலங்கா படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து குறிப்பிட்ட கப்பல் மீண்டும் திருகோணமலைக்குச் செல்ல முற்பட்ட நிலையில், செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் சிறீலங்கா அரசுடன் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, அந்தக் கப்பல் இன்று பிற்பகல் மீண்டும் முல்லைத்தீவுக்குச் சென்று படுகாயமடைந்த நோயாளர்களை ஏற்றிச் சென்றுள்ளது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் சிறீலங்கா படையினருக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு வன்னிக்கு கப்பலை அனுப்பிய போதிலும், சிறீலங்கா படையினர் அதனைக் குறிவைத்து தாக்குதலை நடத்தியிருப்பதாக நம்பப்படுகின்றது.

வன்னிக்கான உணவைத் தடுத்து, அதனை ஆயுதமாகப் பயன்படுத்திவரும் சிறீலங்கா படையினர், படுகாயமடைந்த மக்களை வெளியேற விடாதும் தடுத்தும் வருவதையே இந்த செயற்பாடு புலப்படுத்துகின்றது.

வன்னியில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க தாம் தயாராக இருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனால் அனுப்பி வைக்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாக, செஞ்சிலுவைச் சங்கத்தின் ஜெனீவா அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.