கருணாநிதியை சந்திக்க சென்னை வரும் பிரதமர்

manmohan-singhசென்னை: பிரதமர் மன்மோகன் சிங் நாளை சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை அப்பல்லோ மருத்துவமனையில் சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார். ஆனால், அவர் பொதுக் கூட்டம் எதிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.

காங்கிரஸ்-திமுக உறவு குலைந்து வரும் நிலையில் பிரதமரின் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் அதிமுகவுடன் உறவு என்று பேச ஆரம்பித்துவிட்ட நிலையில், திமுக தரப்பில் காங்கிரஸ் தலைமையிடம் உணர்ச்சிவசமாக சில பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து சென்னையில் முதல்வர் கருணாநிதியுடன் பொதுக் கூட்டத்தில் பேச சோனியா காந்தி நாளை மறுதினம் வர ஒப்புக் கொண்டுள்ளார்.

அதே போல நாளை பிரதமரும் வருகிறார். சிறப்பு விமானத்தில் மீனம்பாக்கம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் துறைமுகத்தில் உள்ள இந்திய கடற்படை தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வரை சந்திக்கும் அவர் பின்னர் கன்னிமாரா ஹோட்டலில் தங்கும் அவர் அங்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.

பின்னர் டெல்லி திரும்புகிறார். அவர் கூட்டம் எதிலும் பங்கேற்கவில்லை. முதல்வரை சந்திக்க மட்டுமே அவர் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவரை எப்படியாவது சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேச வைத்துவிட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முயன்று வருகின்றனர்.

ஆனால், இலங்கை விவகாரத்தில் தமிழக மக்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பிரதமர் குழம்புவதால் பொதுக் கூட்டத்தை அவர் புறக்கணிக்கிறார் என  தெரிகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.