தனி ஈழம்-‘சோனியா மேடையில் அறிவிப்பாரா கருணாநிதி?’

karunanidhi-soniaஇலங்கையில் தனி ஈழத்தை அமைத்தே தீருவேன் என்று இப்போது கூறும் கருணாநிதி 10ம் தேதி சென்னையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் வைத்துக் கொண்டு இதைச் சொல்லத் தயாரா, அதே போல தனி ஈழம் அமைப்பேன் என்று சோனியாவையும் அறிவிக்கச் செய்வாரா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

மருத்துவமனையில் இருந்து கொண்டு தனி ஈழம் அமைப்பது என் பொறுப்பு என்று முதல்வர் கருணாநிதி கூறுகிறார். இதை வரவேற்கிறோம். ஆனால், 10ம் தேதி சோனியா காந்தியுடன் ஒரே மேடையில் பேசும்போது, நான் தனி ஈழத்தை அமைத்தே தீருவேன் என்று கருணாநிதி முழங்குவாரா.. அவ்வாறு பேசத் தயாரா?.

அதே போல அதே மேடையில் தனி ஈழம் அமைப்பேன் என்று சோனியாவையும் பேச வைப்பாரா?. அதற்குத் தேவையான நெருக்கடியை கருணாநிதி கொடுப்பாரா?.

1983ம் ஆண்டிலிருந்தே இலங்கை விஷயத்தில் தவறான கொள்கையை கடைபிடித்து வந்தவர் கருணாநிதி. அதையே இப்போதும் தொடரப் போகிறாரா? அல்லது உண்மையிலேயே அன்புச் சகோதரி ஜெயலலிதா அறிவித்ததைப் போல தனி ஈழம் அமைக்கப் பாடுபடப் போகிறாரா?.

எனக்கு என்னவோ தனி ஈழம் விஷயத்தில் கருணாநிதியின் பேச்சு சந்தேகமாகே உள்ளது. ஆனால், ஜெயலலிதா விஷயத்தில் அவரது பேச்சை நம்புகிறேன். அவர் சொன்ன சொல்லை காப்பாற்றுவார். கருணாநிதி ஏமாற்றுவார்.

இப்போது தேர்தலை எதிர்கொள்ள கருணாநிதிக்கு கைவசம் உள்ள ஒரே ஆயுதம், தனி ஈழம் அமைப்பேன் என்று அறிவிப்பது தான். அதைத் தான் அவர் பயன்படுத்தி நாடகமாடி வருகிறார்.

நாங்கள் வலியுறுத்தி வருவதுபோல, இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தை பெற முயற்சிப்பாரா? ஈழத்தை பெற முயற்சிப்பது எந்த வகையில் என்பதை கருணாநிதி அறிவிக்க வேண்டும். இவரது முயற்சிக்கு அவரது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்குமா?

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காக பாமக பல போராட்டங்களை நடத்தியது. அது பயனற்று போனதால் உச்சமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றம் அதை நிறைவேற்ற உத்தரவிட்டது.

இந்த நிலையில்தான் கருணாநிதி, கர்நாடகாவில் தேர்தல் நடப்பதால் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தன்னிச்சையாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மிரட்டலுக்கு பயந்தே அதை கிடப்பில் போட்டார். ஆனால், அதே நேரத்தில் கர்நாடகாவில் தொடங்கப்பட்ட பெங்களூர் கூட்டு குடிநீர் திட்டத்தை அங்கு செயல்படுத்தி விட்டார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் திமுகவை காங்கிரஸ் கட்சி கைகழுவி விடும். அதற்கான அறிகுறி இப்போதே தென்படுகிறது. இது ராகுல்காந்தி கூறிய கருத்தில் இருந்தே புலப்படுகிறது.

அப்படி ஒருநிலை வந்தால் திமுக, பாஜக வசம் போய்விடும். திமுகவுக்கு கொள்கை, கோட்பாடு கிடையாது. எந்த கட்சியுடனும் கூட்டு வைப்பார்கள். எந்த கூட்டணி அரசிலும் இடம் பெறுவார்கள். ஆனால், மற்றவர்களை பார்த்து மட்டும் சந்தர்ப்பவாதிகள் என பேசுவார்கள். ஆனால், சந்தர்ப்பவாதத்தின் மறுபெயர்தான் திமுக என்பது எல்லோருக்கும் தெரியும்.

தற்போது ராகுல்காந்தியின் அறிவிப்பால் திமுக-காங்கிரஸ் சோர்ந்து போய்விட்டன.

அன்புமணி ராமதாஸ் கொல்லைப்புறமாக பதவிக்கு வந்து விட்டார் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்திருந்தால் அவர் என்றைக்கோ முதல்வர் ஆகியிருக்க முடியும் என்றார் ராமதாஸ்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.