இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காங்கிரஸ் அரசே காரணம் : அத்வானி

advani”இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசே காரணம்” எ‌ன்று பா.ஜ.க. மூத்த தலைவரு‌ம், ‌பிரதம‌ர் வே‌ட்பாளருமான எல்.கே.அத்வானி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

ராமநாதபுரம் ம‌க்களவை‌த் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமை‌ச்ச‌ர் திருநாவுக்கரசரை ஆதரித்து பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த ‌பிரமா‌ண்ட பொதுக்கூட்ட‌த்‌தி‌ல் எ‌ல்.கே.அ‌த்வா‌னி பேசுகை‌யி‌ல் அவர் குற்றம்சாட்டினார்.

அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில்,

”தற்போது 15ஆவது ம‌க்களவை‌த் தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்தத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். அவர் இந்தக் கட்சியில் சேர்ந்த நாளில் இருந்தே மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார். மனித நேயம் மிக்கவராக விளங்குகிறார். நாடாளுமன்றத்தில் அவர் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

1952ஆம் ஆண்டில் இருந்தே ம‌க்களவை‌த் தேர்தலை நான் சந்தித்து வருகிறேன். இந்த தேர்தலுக்காக இந்தியா முழுவதும் இதுவரை 123 மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்துள்ளேன். முதன்முறையாக பரமக்குடிக்கு தற்போதுதான் வருகிறேன். இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஜவகர்லால்நேரு முதல் மன்மோகன்சிங் வரை பிரதமராக இருந்து பணியாற்றியவர்களையும் நான் பார்த்து வருகிறேன். 45 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் அவர்கள் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. மன்மோகன்சிங், பெயருக்குத்தான் பிரதமராக உள்ளார். சோனியாகாந்திதான் பிரதமரை இயக்கி வருகிறார்.

கடந்த 15 ஆண்டு காலமாகத்தான் காங்கிரஸ், பார‌தீய ஜனதா என்ற இரு கட்சி ஆட்சி முறை நடந்து வருகிறது. பார‌திய ஜனதா கட்சித் தலைமையில் செயல்பட்டு வந்த தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு கொள்கை ரீதியாக வேறுபாடு இருந்தாலும் பிரதமராக இருந்த வாஜ்பாய் எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் செயல்பட்டனர். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அப்படியொரு நிலை இல்லை.

தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்குக் கடன் அட்டை, தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் திட்டம், நதி நீரை இணைப்பதற்கான திட்டம் குறித்த முயற்சி போன்ற பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

பார‌‌தீய ஜனதாவை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டணி வைத்தனர். கடைசி வரை அவர்கள் ஆட்சியில் இருந்து விட்டு வெளியேறி விட்டனர். அந்த கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி” என்றார்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.