விடுதலைப் புலிகள் தொடர்பில் கரிசனை காட்டவில்லை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

n_srikanthaதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கரிசனை காட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்பாவி பொதுமக்கள் மீது தாம் காட்டி வரும் அக்கறையை அரசாங்கம் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளது எனவும், தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சி என அரசாங்கம் முத்திரை குத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய அமைச்சர்கள் 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன் மிக நெருங்கிச் செயற்பட்டதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதரவினைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் விடுதலைப் புலித் தலைவர்களை மச்சான் என்று அழைத்த பலர் இன்று அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களாக கடமையாற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1986 மற்றும் 1994ம் ஆண்டுகளில் தமது கட்சி விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள சிறிய நிலப்பரப்பில் பெருமளவு பொதுமக்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த நிறுத்தமொன்று அமுல்படுத்தப்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுமாறு விடுதலைப் புலிகளிடம் கோரிக்கை விடுக்கத் தயார் என ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இந்தத் திட்டத்திற்கு தமது கட்சி பூரண ஆதரவினை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பல பாகங்களில் ஊடுறுவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிழக்கு மற்றும் வன்னி காட்டுப் பகுதிக்குள் புலி உறுப்பினர்கள் ஊடுறுவியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் கெரில்லா போராட்ட யுத்தியை பயன்படுத்தக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால் காத்திரமான சமாதான திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சி அளித்து வரும் உதவிகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.