“வன்னிக்கான கப்பல்”

shipஜேர்மனியில் “வன்னிக்கான கப்பல்” என்னும் ஒரு நடவடிக்கை நேற்று (08.05.2009) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டள்ளது. பாதுகாப்பு வலயம் என்னும் பெயரில் சிறிலங்கா அரசு உருவாக்கியுள்ள கொலைக் களத்தில் பெரும் துன்பத்தில் வாழும் மக்களுக்கான நிவாரணப் பொருட்களை அனுப்பும் திட்டங்களையும், வவுனியாவின் தடுப்பு முகாம்களில் வாடும் மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் மிக விரைவில் மீள்குடியேற்றும் திட்டங்களையும் இந்த “வன்னிக்கான கப்பல்” என்னும் நடவடிக்கை கொண்டுள்ளது.

திரு அல்பேற் கோலன், திரு வலன்ரைன் ஆகியோர் உட்பட பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஒரு செயற்பாட்டுக் குழு “வன்னிக்கான கப்பல்” நடவடிக்கையை வழிநடத்துகிறது. ஜேர்மனியில் உள்ள டியுஸ்பேர்க் என்னும் நகரத்தில் இன்று இந்த நடவடிக்கை பற்றி விளக்குவதற்காக ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது. பல ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பில் “வன்னிக்கான கப்பல்” நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி விளக்கப்பட்டது. ஜேர்மனிய உதவி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தொழில் நுட்பவியலாளர்கள், புனரமைப்பு நிறுவனங்கள் போன்றவற்றின் பங்களிப்போடு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பாரிய அளவில் செய்யப்படவுள்ள இந்த நடவடிக்கை முக்கியமான திருப்பங்களை உருவாக்கும் என்று சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.